100 நாளில் விலைவாசியைக் கட்டுப்படுத்தவதாக கூறிய காங். அதைச் செய்ததா? - மோடி கேள்வி
பாட்னா: தொடர் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் இன்று பாட்னாவில் நடந்த பாஜக கூட்டத்தி்ல பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது முதல்வர் நிதீஷ் குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகியது குறித்து அவர் விமர்சித்தார்.
பீகாரின் வரலாறு, பாரதத்தின் வரலாறாகும். இது சாதாரண கூட்டம் அல்ல. நாட்டின் பெரும் பலத்தை வெளிக்காட்டும் கூட்டமாகும். இந்தியாவின் வரலாற்றில் இரண்டு பெரும் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஒன்று சம்பரனில் நடந்த சத்தியாக்கிரகம். இன்னொன்று குஜராத்தின் தண்டியில் நடந்த உப்பு யாத்திரை.
பீகார் நாட்டை எப்போதுமே வழிநடத்தியுள்ளது. புத்தர், மகாவீரர், குரு கோவிந்த் சிங், ஜெயப்பிரகாஷ் நாராயணன் என பல தலைவர்களை அது கொடுத்துள்ளது.

பீகார் முதல்வர் எனது அருமை நண்பர். அவர் எங்களை விட்டு போனது குறித்து பலர் என்னிடம் கேட்டனர். அதற்கு நான் சொன்னேன், ஜெபியை (ஜெயப்பிரகாஷ் நாராயணனை)விட்டே விலகியவர்கள் பாஜகவை தூக்கி எறிவது எளிதானதுதானே என்றேன்.
பீகார் பல நல்ல தலைவர்களைத் தந்துள்ளது - சில விதிவிலக்குகளைத் தவிர.
ராம் மனோகர் லோஹியாவின் சிஷ்யர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்வோம், எங்களை முதுகில் குத்தி விட்டனர். அவர்கள் காங்கிரஸுடன் தற்போது இருக்கிறார்கள். இவர்களது செயலை ஜெபியும், லோஹியாவும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
2006ம் ஆண்டு எனது நண்பரும், உங்களது முதல்வரும், குஜராத்துக்கு ஒரு திருமணத்திற்காக வந்திருந்தார். நானும் அங்கிருந்தேன். அவருக்கு முழு உபச்சாரமும் நாங்கள் செய்தோம்.ஆனால் இன்று உங்களது முதல்வர் எங்களை ஏமாற்றி விட்டார். பாஜகவை மட்டுமல்ல கோடிக்கணக்கான பீகார் மக்களையும் ஏமாற்றி விட்டார். எனது நண்பர், இப்போது பிரதமர் பதவி குறித்து கனவுடன் உள்ளார்.
பீகாரில் எனது நண்பரை முதல்வராக்கியதே பாஜகதான். பாஜகவின் பெருந்தன்மையால்தான் அவர் முதல்வரானார்.
அவர் எனது சிறந்த நண்பராக இருந்தபோது அவருடன் முதல்வர்கள் மாநாட்டில் நான் பழகியுள்ளேன். அப்போது அவர் என்னுடன் அருகில் அமரவே விரும்பவில்லை. சுற்றிலும் கேமராக்கள் இல்லை. தைரியமாக அமருங்கள் என்று நான் கூறினேன்.
காங்கிரஸிடமிருந்து நாட்டை நாம் மீட்டாக வேண்டும்.காங்கிரஸ் அல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்.
நான் நேற்று டிவியைப் பார்த்தபோது நான் சொன்ன ஷாஷாதா என்ற வார்த்தை காங்கிரஸ் நண்பர்களை ரொம்பவே தர்மசங்கடப்படுத்தியிருப்பதை உணர முடிந்தது.
காங்கிரஸ் கட்சி தனது வாரிசு அரசியலை கைவிட்டும், நானும் ஷாஷாதா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்துகிறேன்.
நாட்டின் ஜனநாயகத்திற்கு இந்த வாரிசு அரசியல்தான் மிகப் பெரிய எதிரியாகும். நமது எதிரிகள் யார்.. சாதியம், மதவாத அரசியல், சந்தர்ப்பவாதம் ஆகியவைதான். பீகாரில் அரசியல் இந்த அத்தனை காரணிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது, அசுத்தமாகியுள்ளது.
ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் 10 வருடங்களாகியும் அதை அவர்கள் செய்தார்களா...?
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக காங்கிரஸ் கூறியது. ஏதாவது செய்தார்களா....? ரயிலில் டீ விற்கும் சாதாரண குடிமகனுக்குக் கூடத் தெரியும், நாட்டின் பிரச்சினைகள் குறித்து. ஆனால் ரயில்வே அமைச்சருக்கு அது தெரியாது. நாட்டு மக்களின் பிரச்சினைகளை நான் நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன்.
நாட்டின் ஒற்றுமையை சாணக்கியர் வலியுறுத்தினார். ஆனால் இன்று நாம் அதை பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.
பீகார் ஐக்கிய ஜனதாதள அமைச்சர் ஒருவர், நமது ராணுவத்தினர் சாவதற்காகவே ராணுவத்தில் சேருவதாக கூறினார். இப்படி ஒரு அவமானத்தை உங்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிந்தது..
இங்கு இன்று நடந்தது சாதாரண கூட்டம் அல்ல. வரலாறு படைக்கும் கூட்டம் மட்டும் அல்ல, இந்தியாவின் பெரும் பலத்தைக் காட்டக் கூடிய கூட்டம்.
இன்னும் 200 நாட்கள்தான் இருக்கின்றன. நீங்கள் காட்டப் போகும் ஆதரவை நாங்கள் அன்புடன் திருப்பிக் கொடுப்போம்.
பீகாரில் ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்பங்களை 7500 முஸ்லீம்கள்தான் கொடுத்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் ஏழைகள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள். ஆனால் குஜராத்தில், 4500 இடங்களுக்கு 40,000 பேர் கொடுத்துள்ளனர். காரணம், குஜராத்தில் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.












Click it and Unblock the Notifications