பிரதமரான பிறகு முதன்முறையாக இன்று பெங்களூர் வருகிறார் மோடி! போக்குவரத்தில் மாற்றம்
பெங்களூர்: நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று பெங்களூர் வருகிறார் நரேந்திர மோடி.
மங்கள்யான் செவ்வாய் வட்டப்பாதையில் நாளை நிலைநிறுத்தப்படும் நிகழ்வை பிரதமர் மோடி பார்க்க உள்ளார். இதற்காக இன்று மாலை 6 மணிக்கு அவர் எச்.ஏ.எல் விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்.
விமான நிலையத்தில் பிரதமருக்கு மாநில அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து பாஜ சார்பில் மத்திய அமைச்சர்கள் டி.வி.சதானந்த கவுடா, அனந்த்குமார், ஜி.எம்.சித்தேஸ்வர், கட்சியின் மாநில தலைவர் பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட கட்சி நிர்வாகிகள் பூச்செண்டு கொடுத்து மோடியை வரவேற்கிறார்கள்.

பாராட்டு விழா
பின்னர் விமான நிலைய வி.ஐ.பி. நுழைவு வாயில் பகுதியில் பாஜ சார்பில் பிரதமருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பேசுகிறார். இரவு உணவு முடித்த பின் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

இஸ்ரோ செல்கிறார்
நாளை காலை 6 மணிக்கு காரில் புறப்படும் பிரதமர் 6.30 மணிக்கு பெங்களூர் பீன்யாவிலுள்ள உள்ள இஸ்ரோ மையத்திற்கு செல்கிறார். காலை 6.45 மணி முதல் 9.45 மணிவரை இஸ்ரோ மையத்தில் தங்கும் அவர், மங்கள்யான் விண்கலம் தொடர்பாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

சித்தராமையாவுடன் ஒரே மேடையில்
அதை தொடர்ந்து காரில் தும்கூர் மாவட்டம் செல்லும் பிரதமர், காலை 11 மணிக்கு தேசிய நெடுஞ்சாலை 4ல் உள்ள வசந்தநகர் தொழில்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள தென்னிந்தியாவின் முதல் உணவு பூங்காவை திறந்து வைக்கிறார். இவ்விழாவில் முதல்வர் சித்தராமையா, மத்திய, மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.

மதியம் திரும்புகிறார்
விழா முடிந்த பின் தும்கூரில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு செல்கிறார். பகல் 12.30 மணிக்கு தும்கூரில் இருந்து காரில் புறப்படும் பிரதமர், பகல் 1 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 2 நாள் பயணமாக கர்நாடகம் வரும் பிரதமர் மோடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

போக்குவரத்து பாதிப்பு
பிரதமர் வருகையையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு மேல், எச்.ஏ.எல் முதல் ஆளுநர் மாளிகை வரையிலான எம்.ஜிரோடு உள்ளிட்ட சாலைகளில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். அதேபோல நாளை காலை 6.30 மணிக்கு யஸ்வந்த்பூர் வழியான தும்கூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும்.

அவசர கதியில் அகற்றம்
இதனிடையே மோடி வருகையையொட்டி எச்.ஏ.எல் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளின் பொத்தல்கள் அவசர கதியில் அடைக்கப்பட்டன. குப்பைகள் அகற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications