தமிழ்நாட்டிற்கு டஃப் கொடுக்கும் கேரளாவின் பிறப்பு விகிதம்.. ஒற்றை இலக்கம் தான்.. வரலாற்று மாற்றம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலப் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான முக்கிய புள்ளிவிவர அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் கேரளாவின் குழந்தை பிறப்பு விகிதம் (CBR) வரலாற்றிலேயே முதன்முறையாக ஒற்றை இலக்கத்திற்குள் சரிந்துள்ளது. அதோடு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து மிகக் கடுமையான பிறப்பு விகிதச் சரிவு பதிவாகியிருக்கிறது.
பொதுவாகவே எங்கு எல்லாம் மக்கள் நன்கு கல்வி கற்று, வளர்ச்சியை நோக்கி முன்னேறுகிறார்களோ, அங்கே எல்லாம் மனிதவளம் அப்படியே படிப்படியாக குறைந்து போகிறது. நன்கு படித்து நல்ல வசதியை எட்டும் மக்கள், அதிக குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்புவது இல்லை. இன்னும் சிலர் ஒரு குழந்தை, இரண்டு குழந்தை தான் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த வகையில் கேரளா மாநிலம் இந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலம், மிகப்பெரிய அளவில் முன்னேறிய மாநிலம் ஆகும்.

கல்வியில் மிகப்பெரிய அளவில் முன்னேறிய மாநிலம், வசதியிலும், பணக்காரர்கள் அதிகம் வாழும் மாநிலமாக இருக்கிறது. பலர் படித்து வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் செட்டில் ஆகிவிட்டார்கள். இந்த மாநிலத்திற்கு தான் வளைகுடா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக பணம் வருகிறது. இந்த மாநிலம் செல்வ வளத்தில், இயற்கை வளத்தில் குறை இல்லாமல் இருந்தாலும், பிறப்பு விகிதத்தில் பெரிய சரிவினை சந்தித்து வருகிறது. உலகின் மிகவும் வல்லரசான நாடுகளில் உள்ள குழந்தை பிறப்பு விகித பாதிப்பு கேரளாவில் இருக்கிறது.
குழந்தை பிறப்பு விகிதம் ( CBR) என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட ஆண்டில், 1,000 மக்கள் தொகைக்கு எத்தனை உயிருள்ள குழந்தைகள் பிறக்கின்றன என்பதைக் கணக்கிடுவதே பிறப்பு விகிதம் ஆகும். இதனை CBR என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லாத ஆண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என ஒட்டுமொத்த மக்கள் தொகையையும் பகுதியாக எடுத்துக் கொள்வதால் இது 'கச்சா' என்று பிறப்பு விகிதம் அழைக்கப்படுகிறது. இது மக்கள் தொகையின் வயது அல்லது பாலினப் பரவலைப் பிரித்துக் கணக்கிடுவது கிடையாது.
முக்கியப் புள்ளிவிவரங்கள் (2023 - 2024)
கேரளாவின் கச்சா பிறப்பு விகிதம் (CBR) 2023-இல் 11.06 ஆக இருந்தது, அது 2024-இல் 9.64 என்கிற அளவிற்கு வெகுவாக குறைந்துள்ளது. கேரளாவில் பதிவான குழந்தை பிறப்பு எண்ணிக்கை 2023-இல் 3,93,231 ஆக இருந்தது, அது 2024-இல் 3,44,766 என்கிற அளவிற்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
தொடர் சரிவின் பின்னணி என்ன
2022-23 காலகட்டத்தில் பிறப்பு விகிதம் 1.47 சரிந்தது. அதனை தொடர்ந்து 2023-24 காலகட்டத்திலும் அது 1.42 என்கிற அளவில் சரிந்துள்ளது. 1992-ஆம் ஆண்டிற்குப் பிறகான கேரளாவின் மக்கள் தொகைப் பதிவை ஆய்வு செய்யும்போது, அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டதே கிடையாது. இது கேரளாவின் மக்கள்தொகை மாற்றம் மிக வேகமாக நிகழ்வதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் ஊரடங்கிற்குப் பிந்தைய ஆண்டான 2022-இல் மட்டும் இந்த இறங்குமுகம் தற்காலிகமாக மாறியிருந்தது. 2021-இல் 11.94 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2022-இல் 0.59 உயர்ந்து 12.53 ஐத் தொட்டிருந்தது.ஆனால் அதன் பிறகு மீண்டும் வழக்கம்போல பிறப்பு விகிதம் குறையத் தொடங்கியிருக்கிறது.
குழந்தை பிறப்பு விதிகங்களை பொறுத்தவரை அந்த மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு ஏற்பட்டுள்ளது. குறைந்த பிறப்பு விகிதமுள்ள மாவட்டங்கள் என்பது தெற்கு மற்றும் மத்திய கேரளா மாவட்டங்கள் தான். கேரள மாநிலத்திலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதமாக ஆலப்புழாவில் 5.28 ஆக உள்ளது. இரண்டாவதாக கொல்லத்தில் 6.63 பதிவாகியுள்ளது.
மத்திய கேரள மாவட்டங்களான பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகியவற்றில் பிறப்பு விகிதம் 7.69 முதல் 9.30 வரை இருக்கிறது.
அதேநேரம் அதிக பிறப்பு விகிதமுள்ள மாவட்டங்களாக வடகேரளா மாவட்டங்கள் உள்ளன. வட கேரளா மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகியவற்றில் பிறப்பு விகிதம் 10-க்கும் அதிகமாக இருக்கிறது. இதில் மலப்புரம் மாவட்டம் 15.16 என்ற பிறப்பு விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடத்தில் இருக்கிறது.
கேரளாவை ஒப்பிடும் போது, தமிழ்நாட்டின் நிலை இன்னமும் மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறப்பு விகிதச் சரிவு வேகம் 2.35% ஆகும். கேரளாவில் கூட ஆண்டுக்கு சராசரியாக 2.05% சரிவு தான் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 2.35% ஆக 2026 நிலவரம் இருக்கிறது. இந்தியாவிலேயே முதியவர்கள் விகிதம் கேரளாவில் அதிகம். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது.














Click it and Unblock the Notifications