பஞ்சாப்பில் 'புனித நூல்' கிழித்து வீசப்பட்டதால் சீக்கியர்கள் கொந்தளிப்பு-போலீசுடன் மோதலால் பதற்றம்!
சண்டிகர்: பஞ்சாப்பில் தங்களது மதத்தின் புனித நூல் கிழித்து வீசப்பட்டதால் கொதித்தெழுந்த சீக்கியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டத்தின் போது போலீசாருடன் பயங்கர மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் கோட்கபுராவின் பர்காரி கிராமத்தில் உள்ள குருத்வாராவில் இருந்து சீக்கியர்களின் புனித நூல் கடந்த ஜூன் 1-ந் தேதியன்று மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில் திருடப்பட்ட புனித நூலின் 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் கிழித்து வீதியில் வீசப்பட்டிருந்தது சீக்கியர்களிடத்தில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து புனித நூலை திருடி அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மோகா- பெரோஸ்பூர் நெடுஞ்சாலையில் சீக்கியர்கள் நேற்று முன் தினம் போராட்டம் நடத்தினர். அதேபோல் மோகா- கோட்கபுரா நெடுஞ்சாலையிலும் தடுப்புகளை ஏற்படுத்தி நேற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று காலை போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
போராட்டக்காரர்களில் சிலர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அந்த பகுதியே போர்க்களமானது.
இச்சம்பவங்களில் பொதுமக்கள், போலீசார் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications