மார்ப்பிங் ஆபாச வீடியோ மூலம் மிரட்டல்! கையில் சிக்கினால் ‛நாகா ஸ்டைல்’ தண்டனை! பரபர பாஜக அமைச்சர்
கோஹிமா: நாகலாந்து பாஜக தலைவரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னா ஆலோங்கின் வீடியோவை ஆபாசமாக்கி அதனை இணையதளத்தில் பரப்புவதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ள அமைச்சர், மிரட்டிய நபர் கையில் சிக்கினால் ‛நாகா ஸ்டைல்' தண்டனை வழங்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகலாந்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. நெய்பியூ ரியோ முதல்வராக உள்ளார்.
இவரது அமைச்சரவையில் டெம்ஜென் இம்னா ஆலோங் என்பவர் உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இவர் தான் நாகலாந்து பாஜக மாநில தலைவர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.

ஆபாச வீடியோ
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார். இந்நிலையில் இவரது வீடியோ ஒன்றை மர்மநபர் ஆபாசமாக மாற்றி அதனை அவருக்கு ப்ளர் செய்து அனுப்பியுள்ளார். மேலும், இந்த வீடியோவை இணையதளங்களில் பரப்பாமல் இருக்க பணம் வேண்டும் என மர்மநபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த டெம்ஜென் இம்னா ஆலோங் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "சமூக ஊடகங்களில் என்னை பின்தொடர்பவர்களுடன் நான் அடிக்கடி கலந்துரையாடி வருகிறேன். வீடியோ கால் மூலமாகவும் பேசி வருகிறேன். இந்நிலையில் தான் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மர்மநபர் எனது வீடியோவை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றியுள்ளார்

பணம் கேட்டு மிரட்டல்
பயல் என்ற பெயரில் ஜூன் 1ல் வீடியோ வந்தது. பணம் கேட்டு மிரட்டினார். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் விழிப்புடன், கவனமாக இருக்க வேண்டும். இதுதொடர்பான வீடியோ உங்களுக்கு யாராவது அனுப்பினால் அந்த எண் அல்லது ஐபி முகவரியை கொடுங்கள். இத்தகைய செயலில் ஈடுபடும் நபரை பிடித்து ‛நாகா ஸ்டைல்' தண்டனை வழங்குகிறேன்'' என்றார். மேலும் அமைச்சரின் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகா ஸ்டைல் தண்டனையா?
நாகலாந்தில் ‛நாகா ஸ்டைல்' தண்டனை என்பது மிகவும் பழமையானது. அதேநேரத்தில் அவமானதாகவும் கருதப்படுகிறது. அதாவது முக்கோணம் வடிவிலான மரச்சட்டத்திற்குள் குற்றம் செய்த நபரை வைத்து வெளியே விடாமல் தோலில் அரிப்பை ஏற்படுத்துவது தான் இத்தகைய தண்டனை முறையாகும். இது நாகலாந்தின் சில கிராமங்களில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

இதற்கு முன்பு நடந்தது என்ன?
பாஜக தலைவரும், அமைச்சருமான டெம்ஜென் இம்னா ஆலோங் பெயரில் முன்னதாக 2020ல் 23 வயது நிரம்பிய ஒருவர் இவரது சமூக வலைதளங்களில் உள்ள படங்களை பயன்படுத்தி போலியாக கணக்குகள் துவங்கி கல்லூரி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்களிடம் நண்பரானார். இது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த நபர் மன்னிப்பு கேட்டதால் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பிறகு சமீபத்தில் மர்மநபர் அவரது பெயரை பயன்படுத்தி அனாதை ஆசிரமங்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக கூறி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வரும் நிலையில் அவரது வீடியோவை ஆபாசமாக்கி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications