தாமரைக்கு ஓட்டு போடலயா.. தண்ணீர் தர முடியாது! பாஜகவினர் விரட்டியடிப்பதாக மபி கிராம மக்கள் புகார்
போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததாக உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படும் என கிராம மக்கள் புகாரளித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் தலைமையிலான ஆட்சி அங்கு நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற அக்கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது.

அம்மாநிலத்தில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றனர். காங்கிரஸ் - பாஜக இடையிலே இந்த தேர்தல் கடுமையான போட்டி உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டம், முங்காவலி தொகுதிக்கு உட்பட்ட நயகெடா கிராம பாஜக மீது பரபரப்பு புகாரை முன்வைத்து உள்ளார்கள். பாஜகவை சேர்ந்த அம்மாநில அமைச்சர் பிரிஜேந்திர சிங் போட்டியிட்ட இந்த தொகுதியில் தாமரைக்கு ஓட்டு போட்டேன் என்று உறுதிமொழி அளித்தால் மட்டுமே ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதிப்போம் என்று அவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்து இருக்கும் பேட்டியில், “நாங்கள் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது பாஜகவுக்கு ஓட்டு போட்டீர்களா என்று கேட்கிறார்கள். இல்லை என்று சொன்னால் தண்ணீர் தர முடியாது என்று விரட்டி அடிக்கிறார்கள்.” என்று குற்றம்சாட்டி உள்ளார்கள். இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவ் இந்த சம்பவம் தொடர்பாக பேசுகையில், “தேர்தலுக்கு பிறகு இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் பயன்படுத்துவதற்காகவே நயகெடா கிராமத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.” என்றார்.












Click it and Unblock the Notifications