”ஒரு பெண்ணை 4 பேர்... எப்படி சாத்தியம்?”- கேவலமாய் பேசி சர்ச்சையில் சிக்கிய முலாயம் சிங்!
லக்னோ: நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும், எம்.பியுமான முலாயம் சிங் யாதவ் பேசியுள்ள பேச்சு பெண்களிடையே பெரும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எப்படி ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ய முடியும் என்பதுதான் முலாயம் சிங் யாதவ் பேசிய பேச்சாகும்.
இதற்கு முன்பும் கூட பாலியல் பலாத்காரம் செய்தோருக்கு ஆதரவாக பேசி சர்ச்சையை வாங்கிக் கட்டிக் கொண்டவர் முலாயம் சிங் யாதவ் என்பதால் இப்போதும் அவரது பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முலாயம் சிங் யாதவ் பேசுகையில், "கேங் ரேப் என்று கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை.

நடைமுறைக்கு சாத்தியமில்லை:
ஒருவர் பலாத்காரம் செய்தாலும் கூட நான்கு பேரின் பெயர்களை புகாரில் சேர்க்கிறார்கள். நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக குறிப்பிடுகிறார்கள். அது எப்படி நடக்க முடியும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.

நான்கு பேரும் குற்றவாளிகள்:
ஒருவர் பலாத்காரம் செய்திருக்கலாம். மற்றவர்கள் வேடிக்கை பார்த்திருக்கலாம். இப்படி நடக்கத்தான் வாய்ப்புள்ளது. பலாத்கார சம்பவத்தில் சிக்கியவர்கள் நான்கு சகோதரர்கள் இருந்தால் நான்கு பேரையும் குற்றவாளிகளாக்கி விடுகின்றனர்.

உபியில் குறைவுதான்:
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லியுடன் ஒப்பிடுகையில் எனது மகன் அகிலேஷ் யாதவ் ஆட்சி புரியும் உ.பியில் பலாத்காரங்கள் குறைவுதான். ஆனால் அகிலேஷைத்தான் அதிகமாக விமர்சிக்கின்றனர்" என்றார் முலாயம் சிங் யாதவ்.

அபத்தம்...பெரும் அபத்தம்:
முலாயம் சிங் யாதவின் பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த சஸியா இல்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில், அபத்தமாக பேசியுள்ளார் முலாயம் சிங் யாதவ் என்று சாடியுள்ளார்.

பொறுக்கிகளுக்கு ஊக்கம்:
காங்கிரஸ் கட்சியின் ஷோபா ஓஸா கூறுகையில், ஏற்கனவே இவ்வாறு அவர் பேசியுள்ளார். இன்றும் பேசியுள்ளார். இதுபோன்ற பேச்சுக்கள்தான் பொறுக்கிகளுக்கு ஊக்கம் தருவதாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications