மகராஷ்டிரா மழை: மும்பை- கோவா பாலம் இடிந்தது; மாயமான 22 பேரில் 2 பேர் உடல் மீட்பு
ராய்கட்: மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாவித்ரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மும்பை - கோவா சாலையில் உள்ள முக்கிய பாலம் இடிந்து விழுந்தது. இரண்டு பேருந்துகள் கவிழ்ந்ததில் 22 பேர் வரை மாயமாகி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ராய்கட் மாவட்ட ஆட்சியர் ஷீத்தல் உகாலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. நாசிக் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக அதன் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பாதுபாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக சாவித்ரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக மும்பை- கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மஹத் - போலட்பூர் பகுதிகளை இணைக்கும் மேம்பாலம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பேருந்தில் பயணம் செய்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சுற்றுலா துறைக்குச் சொந்தமான அந்த இரண்டு பேருந்துகளிலும் 2 ஓட்டுநர்கள், 2 நடத்துனர்கள், 18 பயணிகள் என மொத்தம் 22 பேர் இருந்துள்ளனர். இரண்டு பேருந்துகளும் அதிலிருந்தவர்களும் காணாமல் போனதை மகாராஷ்டிரா முதல்வர் தனது ட்விட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிந்த டுவீட்களில், "மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மஹத் - போலட்பூர் பகுதிகளை இணைக்கும் மேம்பாலங்கள் இரண்டு உள்ளன. ஒன்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மற்றொன்று புதியது. பழைய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ராய்கட் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் பேசியுள்ளேன். மஹாபலேஸ்வர் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

காணாமல் போன பேருந்தை கண்டுபிடிக்க தேசிய கடலோரக் காவற்படை சேட்டக் ரக ஹெலிகாப்டரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. தேடுதல் வேட்டையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகராஷ்டிரா அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. பேருந்தில் பயணம் செய்தவர்கள் பற்றிய தகவல் அறிய (02141) 222118 என்ற எண்ணிலும் 1077 என்ற டோல் ஃப்ரி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இரண்டு பேருந்துகள் கவிழ்ந்ததில் 22 பேர் வரை மாயமாகி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ராய்கட் மாவட்ட ஆட்சியர் ஷீத்தல் உகாலே தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாகவும் ஷீத்தல் உகாலே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications