370-வது பிரிவு ரத்துக்கு எதிராக மக்கள்- காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா- பரூக் அப்துல்லா அறிவிப்பு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து, ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிக்கப்பட்டது உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் நிராகரித்து வாக்களித்துள்ளனர்; ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா பொறுப்பேற்பார் என்று அவரது தந்தையும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் 2019-ம் ஆண்டு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை அறுவடை செய்துள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வென்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். பாஜக 29 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் வென்று தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைகிறது. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா, 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்தியில் ஆளும் பாஜக, 370-வது பிரிவை ரத்து செய்தது; ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஜம்மு காஷ்மீர் புதிய முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான ஒமர் அப்துல்லா பொறுப்பேற்பார் என்றார்.
ஒமர் அப்துல்லா பட்காம் மற்றும் கந்தெர்பல் தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் பட்காம் தொகுதியில் 18,485 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளார் ஒமர் அப்துல்லா. கந்தெர்பல் தொகுதியில் 10,574 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் ஒமர் அப்துல்லா.
ஒமர் அப்துல்லாவின் தாத்தா ஷேக் அப்துல்லா, அப்பா பரூக் அப்துல்லா ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முதல்வர்களாக பதவி வகித்தனர். 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஒமர் அப்துல்லாவும் ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications