கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 'போலீசார் விசாரணையில் குறைபாடு' - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் மரணித்த வழக்கில், போலீசார் விசாரணையில் சில குறைபாடு இருந்துள்ளது என்றும் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்துள்ளதாகவும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தெரிவித்துள்ளார்.
மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், விசாரணை அதிகாரிகள் ஆகியோரிடமும், பள்ளி விடுதிக்கு சென்றும் சுமார் ஐந்தரை மணி நேரம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தினர்.
- தமிழ்நாடு: ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு
- “ஆண்கள் அனைவரையும் தவறாக நினைத்தேன்” - பெண்கள் பள்ளியில் படித்த மாணவியின் குரல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி பள்ளி விடுதியில் உள்ள மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கள்ளக்குறிச்சி வந்தனர். முதற்கட்டமாக மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர், பள்ளியில் மாணவி தங்கியிருந்த விடுதி மற்றும் அவர் உயிரிழந்ததாக கூறப்படும் பள்ளி வளாகம், இறுதியாக மாணவி மரணம் தொடர்பாக ஆரம்பம் முதல் இந்த வழக்கை விசாரணை செய்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தேசிய மற்றும் மாநில குழுவினர் இணைந்து விசாரணை
இன்று காலை கள்ளக்குறிச்சி வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஒரு மணி நேரம் விசாரணை செய்தது.
இதனையடுத்து மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாணவி தங்கியிருந்த விடுதி, அவர் படித்த வகுப்பு, அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படும் இடம், மாணவி தரை தளத்தில் விழுந்ததாக கூறப்படும் இடங்களை பார்வையிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பள்ளியில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர், இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரணை செய்து வந்த அதிகாரிகள், பணியிடை மாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், காவல் துறையினர், மாணவியை உடற் கூராய்வு செய்த மருத்துவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், போலீசார் விசாரணை குறைபாடு
இன்று(ஜூலை 27) காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பிற்பகல் 2.30 மணி வரை மூன்று இடங்களில் நடைபெற்றது. இந்த விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ, "தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று முதலில் விசாரணை செய்தோம். இதையடுத்து மாணவி உயிரிழந்த பள்ளிக்கு சென்று அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டோம்.
அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து விசாரணை செய்துள்ளோம். இதில் மாணவிக்கு உடற் கூராய்வு செய்த மருத்துவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டோம்
மேலும் நாங்கள் கவனித்தது வரை ஆரம்பக்கட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி விடுதி இயக்கியது தெரியவந்துள்ளது. பள்ளி நிர்வாகமும் மாணவி மரணத்தில் அலட்சியமாக இருந்துள்ளனர். மேலும் மாணவர்களுடைய அடிப்படை வசதிகள் குறித்து சரியாக ஆய்வு செய்யாமல் பள்ளி நிர்வாகம் இருந்துள்ளனர். நாங்கள் விசாரணை செய்த அனைத்தையும் அறிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்," என தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணையில் என்ன குறைபாடு என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அதை அறிக்கையில் குறிப்பிடுவோம் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














Click it and Unblock the Notifications