காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பாமல் நேரு மெத்தனமாக இருந்தார்: அத்வானி புதிய தகவல்
டெல்லி: பாகிஸ்தான் படைகள் நெருங்கியபோதிலும் காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப ஆர்வமின்றி முன்னாள் பிரதமர் நேரு இருந்தார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கும், முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு பற்றி அத்வானி தமது வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஹைதராபாத்துக்கு எதிராக போலீஸ் நடவடிக்கையை வலியுறுத்திய படேலை நேரு மதவாதி என்று விமர்சித்ததாக கடந்த 5-ந்தேதி அத்வானி எழுதி இருந்தார்.

சாம் மானக்ஷா கருத்தை முன்வைத்து..
இதைத் தொடர்ந்து நேற்று தனது வலைத்தள பக்கத்தில் அத்வானி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 1948-ம் ஆண்டு நடந்த அச்சம்பவம் பற்றி அப்போது ராணுவ கர்னலாக இருந்த சாம் மானக்ஷா அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி அத்வானி எழுதி இருப்பதாவது:

இந்தியாவுடன் இணைய விரும்பிய காஷ்மீர் மகாராஜா
கடந்த 1948-ம் ஆண்டு காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க விரும்பினார். இதுதொடர்பான இணைப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

காஷ்மீரை கைப்பற்ற பாக். படைகள்
அது பிடிக்காமல் காஷ்மீரை கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் படைகள் விரைந்தன. பாகிஸ்தான் படைகளின் ஆதரவு பெற்ற பழங்குடியினர் ஸ்ரீநகரை நெருங்கினர்.

இந்திய ராணுவத்தை அனுப்ப கோரிக்கை
அப்போது அமைச்சரவை கூட்டப்பட்டது. காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து சாம் மானக்ஷா விளக்கி கூறினார். அங்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

ஐநாவுக்கு போகலாமே- நேரு
ஆனால் அங்கு படைகளை அனுப்ப நேருவுக்கு ஆர்வம் இல்லை. இப்பிரச்சினையை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லலாம் என்று வழக்கம்போல கூறினார்.

பொறுமை இழந்த படேல்
உடனே சர்தார் வல்லபாய் படேல் பொறுமை இழந்தார். அவர் நேருவைப் பார்த்து, ஜவகர்லால், உங்களுக்கு காஷ்மீர் வேண்டுமா அல்லது அதை விட்டுக்கொடுக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.

சாம் மானக்ஷாவிடம் உத்தரவு கொடுத்த படேல்
அதற்கு நேரு, காஷ்மீர் வேண்டும் என்று கூறினார். உடனே படேல், அப்படியானால், தயவுசெய்து உத்தரவு தாருங்கள் என்று கூறினார். அதற்கு நேரு பதில் அளிப்பதற்குள் படேல், சாம் மானக்ஷாவை பார்த்து, உங்களுக்கு உத்தரவு கிடைத்து விட்டது என்று கூறினார். இதையடுத்து, பாகிஸ்தான் படைகளுடன் போரிடுவதற்காக, ஸ்ரீநகருக்கு இந்திய படைகள் பறந்து சென்றன என்று அத்வானி எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications