நிதீஷ்குமாருக்கு அக்னி பரிட்சையாக மாறியுள்ள நாடாளுமன்ற தேர்தல்
பாட்னா: பிகாரில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தல்கள் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமாருக்கு அக்னி பரிட்சையாக மாறிப்போயுள்ளது.
பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கும், பாஜகவுக்கும் இருந்த கூட்டணி மோடியை பிரதமர் பதவி வேட்பாளராக பாஜக அறிவித்ததும் முறிந்தது.
எனவே இவ்விரு கட்சிகளும் தனித்தனியே பிகாரில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன. மற்றொருபக்கம் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை சென்ற லாலு பிரசாத் இத்தேர்தல் மூலம் தனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதை நிரூபிக்க எண்ணுகிறார்.

அவருக்கு யாதவர், தலித், இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி பலமாக உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூருகிறார்கள். மற்றொரு பக்கம் நித்திஷ்குமாருக்கு தக்க பாடம் கற்பித்து கொடுப்பது என்ற முடிவில் நரேந்திரமோடி இருக்கிறார். பிகாரில் இதுரை அவர் 16 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். மேலும் நான்கு தொகுதிகளில் நாளை உரையாற்ற உள்ளார்.
மோடி மற்றும் லாலு ஆகியோரின் இருமுனை தாக்குதல்களால் நிதீஷ்குமார் கதிகலங்கிப் போயுள்ளார். ஆட்சியில் இருப்பதால் மக்களிடம் இயல்பாக எழும் அதிருப்தி அலையும் நிதீஷ்குமாருக்கு எதிராக மாறக்கூடும்.
இந்நிலையில் நாளை பிகாரின் 7 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 2009ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்த தொகுதிகளை பாஜகவுடன் இணைந்து ஐக்கிய ஜனதாதளம் வென்றிருந்தது. எனவே இந்த ஏழு தொகுதிகளும் நிதீஷ்குமாருக்கு கவுரவமிக்கவையாக பார்க்கப்படுகிறது.
மேலும். அடுத்து நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அமையும் என்பதால் நிதீஷ்குமாருக்கு இத்தேர்தல் அக்னி பரிட்சையாக மாறிப்போயுள்ளது.












Click it and Unblock the Notifications