அமெரிக்காவில் இருந்து மேலும் 20 இந்திய மாணவர்கள் நாடு கடத்தல்
ஹைதராபாத்: அமெரிக்காவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 20 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு படிக்கச் சென்ற ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 20 மாணவர்கள் அந்நாட்டு சுங்கத் துறையினரால் பிடித்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் அந்த மாணவர்களின் விசாக்களை திரும்பப்பெற்றதால் அவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினர்.

அந்த 20 பேரும் சிகாகோ அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் சேர அங்கு சென்றனர். முன்னதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள 2 கல்லூரிகளில் சேர்ந்த 14 மாணவர்கள் கடந்த 19ம் தேதி நாடு கடத்தப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் படித்த கல்லூரிகள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு பல மணிநேரம் விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். மேலும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கல்லூரிகளில் சேர ஹைதராபாத்தில் இருந்து கிளம்பிய 19 மாணவர்களை விமானத்தில் ஏற்ற ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துவிட்டது.
கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்தும் பல மாணவர்கள் அமெரிக்கா செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications