233 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து! ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்! நவீன் பட்நாயக் அறிவிப்பு
ஒடிசா: மேற்குவங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டதில் அடுத்தடுத்து மேலும் இரண்டு ரயில்கள் இதில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் தற்போது வரை சுமார் 233 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரு நாள் ஒடிசாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. ஆனால், சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்துள்ளது. ஆனால், அது பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.
பத்ராக் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுவடைந்திருக்கிறது. ஆனால் ரயிலுக்கு என்ன ஆனது என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதன் பின்னர்தார் பல்சோர் மாவட்டம் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே இந்த ரயில் தடம்புரண்டுள்ளது. இந்த ரயிலின் B2 முதல் B9 வரை உள்ள பெட்டிகள் மற்றும், A1, A2 பெட்டிகள் என 10 பெட்டிகள் மொத்தமாக தடம்புரண்டு எதிர் தண்டவாளத்தில் விழுந்திருக்கிறது.

இதனையடுத்து பெங்களூர் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி வந்துக்கொண்டிருந்த மற்றொரு ரயில் இந்த தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது வேகமாக மோதியுள்ளது. இதுதான் விபத்தை, கோர விபத்தாக மாற்றியதற்கான காரணமாகும். இந்த யஷ்வந்த்பூர் ரயிலின் பெட்டிகள் விபத்தில் சிக்கி மூன்றாவது தண்டவாளத்தில் விழுந்துள்ளது. ஏற்கெனவே கோர விபத்தில் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், மூன்றாவது டிராகில் வந்த சரக்கு ரயில் இந்த யஷ்வந்த்பூர் ரயில் பெட்டியின் மீது கண்மூடித்தனமாக மோதியுள்ளது.
ஆக மூன்று ரயில்களும் அடுத்தடுத்த ரயில் நிலையத்தை குறித்த நேரத்தில் அடையாததால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எனவே சந்தேகத்தின் பேரில் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்க கோர விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஏராளமான மீட்புப்படையினர் மற்றும், விமானப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட பொதுமக்களும் இதில் இறங்கினர்.
இந்நிலையில் தற்போது வரை சுமார் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார. இந்த விபத்து காரணமாக 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல 35 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்திற்கு பொறுப்பேற்று வைஷ்னவ் பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications