உடலில் ஒரு சிறு காயம் கூட இல்லை.. ஆனாலும் ஒடிஸா ரயில் விபத்தில் 40 பேர் பலி! வெளியான அதிர்ச்சி தகவல்
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்தில் இறந்த 40 பேரின் உடல்களில் ரத்தமோ எந்த வித காயமோ இல்லை, ஆனாலும் அவர்கள் இறந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் ஊர்களில் உள்ள சொந்தங்களை பார்த்துவிட்டும் பார்ப்பதற்காகவும் ஹவுரா ரயிலில் சென்னை வந்துக் கொண்டிருந்தனர். யாருமே கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் சோகம் நடந்துவிட்டது.

ஜூன் 2 ஆம் தேதி இரவு 6.50 மணிக்கு ரயிலில் ஏறியதும் உறவினர்களுக்கு போன் போட்டு ரயில் ஏறிவிட்ட விஷயத்தை சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் உட்கார்ந்தனர். சிலர் பர்த்களில் ஏறி களைப்பில் படுத்துவிட்டனர்.
அப்போது பாலசோர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தடம்புரண்டு அங்கு வேறு டிராக்கில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்து வேறு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பயணிகள் ரயிலும் விபத்தில் சிக்கியது.
இந்த கோர விபத்தில் 275 பேர் பலியாகிவிட்டதாகவும் 1100 பேர் காயமடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை செய்தனர். காயமடைந்தவர்கள் அருகே இருந்த மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். மிகவும் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். தனது தாயின் இறப்பின் போது கூட அவர் இத்தனை இறுக்கமாக இருக்கவில்லை. ஆனால் அன்று நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானதை நினைத்து அவர் முகம் முழுவதும் சோகமாக இருந்தது
இந்த விபத்துக்கு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த ரயில் விபத்து குறித்து நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு ரயில் தடம்புரண்ட போது மற்றொரு ரயில் வருவதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டது, அந்த ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் இதை ஏன் வாக்கிடாக்கியில் தெரிவிக்கவில்லை உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன.
விபத்து நடந்து மீட்பு பணிகள் முடிந்து அந்த ரயில் தண்டவாளங்களில் ரயில்களின் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு நிறைய உடல்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அவற்றை போலீஸார் புகைப்படம் எடுத்து வைத்துள்ளனர்.
அந்த புகைப்படங்களை பார்த்து தங்கள் உறவினர்களை கோருவோரிடம் உரிய ஆதாரங்களை சரி பார்த்துவிட்டு உடல்கள் ஒப்படைக்கப்படுகின்றன. இந்த நிலையில் விபத்தில் சுமார் 40 பேரின் உடல்களில் எந்த காயங்களும் ரத்தக் கறையும் இல்லாமல் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பர் என்கிறார்கள். ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி தூக்கி வீசப்பட்ட போது தண்டவாளத்தின் கம்பிகளில் உரசி மின்சாரம் பாய்ந்திருக்கும். இதனால் இந்த 40 பேரும் உயிரிழந்திருப்பார்கள் என கூறுகிறார்கள்.
விபத்தில் பலியான 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. அதனால் அந்த உடல்களை அரசு பதப்படுத்தி வைத்துள்ளது. இதற்காக பாரதீப் துறைமுகத்திலிருந்து 5 கன்டெய்னர்களை அரசு வாங்கியுள்ளது. இந்த விபத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களே அதிகம் பேர் பலியாகியுள்ளனர். அதாவது இறந்தவர்களில் 61 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications