அப்பாவி மக்களின் உயிரை குடித்த பஹல்காம் தாக்குதல்.. ஒரு மாதத்திற்கு பிறகும் விடை கிடைக்காத 4 கேள்விகள்
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா வெற்றிகரமாக ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காட்டியது. ஆனால், பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும், இன்னும் 4 முக்கியமான கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைக்கவில்லை. இது குறித்து நாம் பார்க்கலாம்.
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, அதாவது ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடியாகவே இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது.
அதன் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இந்தியா தாக்கியதில் பயந்து போய் பாகிஸ்தான் பின்வாங்கியது எல்லாம் அனைவருக்கும் தெரியும். அதேநேரம் பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தலைவர்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் குறிப்பாக 4 கேள்விகள் முக்கியமானதாக இருக்கிறது.

முதலில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே?
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தியா ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியது. அதில் 100+ பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனால், பஹல்காமில் அப்பாவி மக்களிடம் மதத்தைக் கேட்டு, அவர்களைச் சுட்டுத்தள்ளிய தீவிரவாதிகள் எங்கே.. அவர்கள் என்ன ஆனார்கள்.. ஆபரேஷன் சிந்தூரில் அவர்கள் கொல்லப்பட்டனரா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் நமக்குப் பதில் கிடைக்கவில்லை.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் லஷ்கர் இ தொய்பாவின் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. என்ஐஏ நடத்திய விசாரணையில் அவர்களின் போட்டோக்கள் கூட வெளியாகின. இருப்பினும், பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இன்னுமே கூட அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்கள் இன்னும் காஷ்மீர் காடுகளில் பதுங்கி இருக்கிறார்களா.. இல்லை பாகிஸ்தானுக்கே தப்பிவிட்டார்களா என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.
அடுத்து பைசரன் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா?
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வீரத்தை உலகமே பார்த்தது. இஸ்லாமாபாத்தில் கூட இந்திய பாதுகாப்புப் படைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. ஆனால், பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்கில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லையோ என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே எழுப்பி வருகிறார்கள். அது பாகிஸ்தான் எல்லையில் இருந்து அருகே இருக்கிறது. அங்குச் சுற்றுலாப் பயணிகளும் திரளும் நிலையில், அங்கு ஏன் உரியப் பாதுகாப்பு போடவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முன்பே அந்த பகுதியை நோட்டம் விட்ட வீடியோக்களும் கூட வெளியாகி இருந்தன. அதாவது அவர்கள் பல இடங்களில் நோட்டமிட்டு பைசரன் பள்ளத்தாக்கைத் தேர்வு செய்திருக்கலாம்.. பிறகு தப்பியும் ஓடியுள்ளனர். இதனால் அங்கு உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது ஏன்.. இது உளவுத் துறை தோல்வியா என்ற கேள்விகளுக்கும் உரியப் பதில் கிடைக்கவில்லை.
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் டிரம்பிற்கு பங்கு இருந்ததா?
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் அத்துமீறிய நிலையில், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பல முக்கிய இடங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல்களை நடத்தியது. இதைச் சமாளிக்க முடியாமலேயே பாகிஸ்தான் டிஜிஎம்ஓ போரை நிறுத்த இந்தியாவுக்குக் கோரிக்கை விடுத்தார். அதாவது பாகிஸ்தான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாகவே இதன் பொருள்.
ஆனால், இந்த மோதலை நான் தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறுகிறார். மோதல் முடிவுக்கு வந்ததை இரு நாடுகளும் அறிவிக்கும் முன்பே டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வர்த்தகத்தை வைத்து இரு நாடுகளையும் போர் நிறுத்தம் செய்ய வைத்ததாக டிரம்ப் சொல்லி வருகிறார். அதுவும் இதுவரை 7 முறை இந்த கருத்துகளை அவர் கூறிவிட்டார். இதனால் டிரம்பின் பங்கு என்னவாக இருந்தது என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் எழுப்புகிறார்கள்.
எதிர்ப்பு உள்ள நாடுகளுக்கு பிரதிநிதிகள் அனுப்பாதது ஏன்?
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு உலக நாடுகளுக்கு விளக்கம் தரும் வகையில் இந்தியா தனது எம்பி குழுக்களை பல நாடுகளுக்கு அனுப்பியுள்ளன. இருப்பினும், சீனா உள்ளிட்ட பாக். ஆதரவு நிலைப்பாடு எடுத்த நாடுகளுக்கு எந்தவொரு பிரதிநிதிகளையும் அனுப்பவில்லை. ஏற்கனவே ஆதரவாக இருக்கும் நாடுகளை விட இதுபோல உள்ள நாடுகளுக்கே முதலில் பிரதிநிதிகளை அனுப்பியிருக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் வாய்ஸ்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது உலகெங்கும் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக அந்தந்த நாட்டு அரசுகளுக்கு தாக்குதல் குறித்து தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அதையும் இந்தியா செய்யாதது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகிறார்கள். நெட்டிசன்கள் பலரும் கூட இதே கேள்விகளை தான் எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications