இந்திய நெருக்கடி: இலங்கையிலுள்ள தனது நாட்டு தூதரக அதிகாரியை திரும்ப பெற்றது பாகிஸ்தான்

இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர், தமிழக போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும் உளவு பார்க்கும் நோக்கத்தில், அவர் இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரியவந்தது.
மலேசியாவில், இலங்கையைச் சேர்ந்த முகமது உசேன் முகமது சுலைமான் என்பவரின் கைது மூலம் இதில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பது அம்பலம் ஆனது. அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் மூலம் இந்தியா ஏற்கனவே வாரண்டு பெற்றிருந்தது.
அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்களை தாக்கவரும் 2 பேருக்கு உதவி செய்யுமாறு தனக்கு உத்தரவு வந்திருப்பதாக அவர் மலேசிய போலீசாரிடம் கூறினார்.
ஜாகீர் உசேன், மேற்கண்ட தூதரகங்களை உளவு பார்ப்பது என்றும், தூதரகங்களை தாக்க மாலத்தீவில் இருந்து 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு சுலைமான் உதவி செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிடிபட்ட ஜாகீர் உசேன், தன்னை உளவு வேலைக்கு அனுப்பியவர் பெயர் சுபைர் சித்திக் என்று தெரிவித்தார். சுபைர் சித்திக், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், விசா பிரிவு உயர் அதிகாரியாக இருப்பவர் ஆவார்.
இந்த விவகாரம், சர்வதேச வடிவத்தை எட்டியதால், கடந்த மாதம் இந்த விசாரணை பொறுப்பை தமிழக போலீசிடம் இருந்து தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) ஏற்றுக்கொண்டது. என்.ஐ.ஏ. உயர் அதிகாரி ஒருவர், சமீபத்தில் மலேசியாவுக்கு சென்றார். சுலைமானிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, தூதரகங்களை தாக்கும் சதித்திட்டம், பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.யின் கட்டளைப்படி தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி சுபைர் சித்திக்கை திரும்பப் பெறுமாறு இந்தியா நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது.
அதற்குப் பணிந்து, பாகிஸ்தான் அரசு, சுபைர் சித்திக்கை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின்படி, என்.ஐ.ஏ.வின் முறையான வேண்டுகோள், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை அடைவதற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக பத்திரிகை தொடர்பு அதிகாரி முகமது தவுத் எதிஷம் கூறுகையில் "பணிக்காலம் முடிந்ததால்தான், சுபைர் சித்திக் பாகிஸ்தானுக்கு திரும்பி உள்ளார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications