எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் நபர்.. வார்னிங்கை கேட்காததால் சுட்டு கொன்ற BSF.. பயங்கரவாதியா?
காந்திநகர்: பாகிஸ்தானில் இருந்து குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் எல்லை தாண்டி உள்ளே நுழைய முயன்ற பாகிஸ்தான் நபர் சுட்டு கொல்லப்பட்டார். கண்காணிப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் பலமுறை வார்னிங் செய்தும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் கேட்காததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்போது இறந்துள்ள அந்த நபர் பயங்கரவாதியா? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர்.

இதற்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நம் நாடு கையில் எடுத்தது. கடந்த 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 9 பயங்கரவாதிகளின் முகாம், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டது. பதிலுக்கு பாகிஸ்தான் படைகள் தாக்க முயன்றன. அந்த தாக்குதல்கள் நம் படை வீரர்களால் முறியடிக்கப்பட்டது. மேலும் நம் நாட்டின் பதிலடி தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் சண்டையை நிறுத்த கெஞ்சியதால் நம் நாடும் தாக்குதலை நிறுத்தியது. இப்போது எல்லையில் அமைதி திரும்பி உள்ளது.
இருப்பினும் கூட பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நம் நாட்டுக்குள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் - இந்தியா சர்வதேச எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நேற்று இரவு வழக்கம்போல் எல்லையில் நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் எல்லையில் இருந்து பாகிஸ்தான் நபர் ஒருவர் நம் நாட்டுக்குள் நுழைய முயன்றார்.
இதனை நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்தனர். உடனடியாக அவரை திரும்பி செல்லும்படி வார்னிங் செய்தனர். ஆனால் அந்த நபர் திரும்பி செல்லவில்லை. தொடர்ந்து நம் நாட்டின் நிலப்பகுதியை நோக்கி முன்னேறி வந்தார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் மீது எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து பாகிஸ்தான் நபர் இறந்தார். அவர் யார்? பெயர் என்ன? பின்னணி என்ன? பயங்கரவாதியா? என்பது தெரியவில்லை. இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications