"நீ விரலைக் காட்டினால்.. நாங்கள் விரலை சுழற்றுவோமே"... நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு மக்கள் எதிர்ப்பு
நகரி: கோவில் திருவிழாவில் புகுந்து பிரச்சாரம் செய்ய நடிகர் பாலகிருஷ்ணா முற்பட்டதால் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. சீமாந்திரா பகுதியில் வருகிற 7 ஆம் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது.
மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவின் மகனான நடிகர் பாலகிருஷ்ணா அனந்தபுரம் மாவட்டம் சிந்துபுரா சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிடுகிறார். இது என்.டி. ராமாராவ் வெற்றி பெற்ற தொகுதியாகும்.

நடிகர் பாலகிருஷ்ணா பிரசாரத்துக்கு பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. இதனால் பொது மக்கள் கூடும் இடத்தில் பிரசாரம் செய்ய பாலகிருஷ்ணா திட்டமிட்டார்.
செல்லிவேந்தலா என்ற இடத்தில் ரங்கநாதசாமி கோவில் ரத உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர். கோவிலில் பிரசாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து இருந்த போதிலும் அதையும் மீறி பாலகிருஷ்ணா அங்கு சென்றார்.
திருவிழாவில் கூடி நின்ற மக்களிடம் வெற்றியின் சின்னமான இரட்டை விரலை காட்டி வாக்கு சேகரித்தார். இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாலகிருஷ்ணாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிலர் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் மின் விசிறி சின்னத்தை குறிக்கும் வகையில் கைவிரலை சுழற்றினார். அதோடு பாலகிருஷ்ணாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து போலீசார் பாலகிருஷ்ணாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications