அசாமில் 81.96 % வாக்குப்பதிவு: காம்ரூப் மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு
கவுகாத்தி: அசாம் சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 5 மணிவரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் 81.96 சதவிகித வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் காலை முதலே வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 3 மணி நிலவரப்படி அசாமில் 3 மணி நிலவரப்படி 72 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
அசாமில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி மொத்தமுள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில், 65 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில், 82.21 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி வாக்குப்பதிவு 61 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநில முன்னாள் முதல்வரும், அசாம் கணபரிஷத் தலைவருமான பிரபுல்ல மகந்தா,பாஜக தலைவர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அனைத்து இந்திய ஐக்கிய மக்கள் முன்னணி தலைவர் அத்ருத்தீன் அஜ்மல் உள்ளிட்டோர் இன்றைய வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
அசாமில் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
துப்பாக்கிச்சூடு
காம்ரூப் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் சிஆர்பிஎஃப் வீரருக்கும் வாக்காளர்கள் சிலருக்கு ஏற்பட்ட மோதலை அடுத்து கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் எஸ்.பி பிரசாந்தா சாய்கியா , "காம்ரூப் மாவட்டத்தின் நித்யாசர் குலா பஜார் பகுதியில் உள்ள எல்.பி. பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த பெண் ஒருவர் அவரது குழந்தையை வாக்குச்சாவடியிலேயே விட்டுவிட்டு வந்துள்ளார். திரும்பவும் தனது குழந்தையை எடுக்க உள்ளே செல்ல வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார். அப்போது அந்த வீரர் அப்பெண்ணிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாக்குச்சாவடியில் இருந்த வாக்காளர்களுக்கும் சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதனிடையே இந்த தேர்தலில் 81.96 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications