மோடி விழாவில் உம்மன்சாண்டி பங்கேற்க தடை- கேரளா மக்களை அவமதித்ததாக ராகுல் கொந்தளிப்பு...
திருவனந்தபுரம்/ டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவில் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொள்ள கூடாது என விழா ஏற்பாட்டாளர்கள் தடை விதித்தது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உம்மன்சாண்டியை ஓரம்கட்டியதன் மூலம் கேரளா மக்களையே பிரதமர் மோடி அவமதித்துவிட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கொல்லத்தில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு சார்பில் கேரள முன்னாள் முதல்வர் ஆர். சங்கரின் சிலை திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்று சிலையை திறந்து திறந்து வைக்கிறார். இந்த விழா அழைப்பிதலில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
PM has insulted the people of Kerala, he has stopped our Chief Minister from going to a function-Rahul Gandhi pic.twitter.com/B1B940RzGD
— ANI (@ANI_news) December 14, 2015 ஆனால் இந்த விழாவை நடத்தும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவர் வெள்ளாபள்ளி நடேசன், முதல்வர் உம்மன்சாண்டியை தொடர்பு கொண்டு சிலை திறப்பு விழாவுக்கு நீங்கள் வர வேண்டாம் என முகத்தில் அடித்தாற்போல கூறியிருக்கிறார்.
இதனால் உம்மன்சாண்டி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இது கேரளா அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தவர்தான் இந்த வெள்ளாபள்ளி நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை ஓரம்கட்டுவது என்பது கேரளா மக்களையே அவமதிக்கும் செயல் என சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் சிங்வி, உம்மன் சாண்டி அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில முதல்வர். அவரை புறக்கணிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அவமானப்படுத்தியதற்கு சமம். பாரதிய ஜனதா அரசின் இத்தகைய செயல்பாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications