ராமர் சிலை பிரதிஷ்டை.. தெய்வீக நிகழ்ச்சி.. உணர்ச்சிகரமான தருணம்! .. பிரதமர் மோடி பெருமிதம்
அயோத்தி: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்த பிரதமர் நரேந்திர மோடி, இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் குழந்தை ராமர் சிலை இன்று பிற்பகல் 12.29.08 மணி முதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரமானது, பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ள காலம் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று கூறியுள்ளார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கடுமையான விரதங்களை மேற்கொண்டிருந்தார். கடந்த 12ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள காலா ராம் கோயிலில் அவர் இந்த விரத்தை தொடங்கினார். இக்கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையதாகவும், இக்கோயிலில் தரிசனம் செய்த அவர், பவார்த் ராமாயணத்தின் ஸ்லோகங்களை பாராயணம் செய்தார்.
அதன் பின்னர், கடந்த 16ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தியின் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் வழிபாடு நடத்தி, ரங்கநாத ராமாயணத்தை பாராயணம் செய்தார். பின்னர் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூர் கோயில், திரிபிரயார் ஸ்ரீ ராமசுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரத்தில் சுவாமியை தரிசனம் செய்து, ஸ்லோகங்களை பாராயணம் செய்தார்.
இறுதியாக தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த அவர் கடலில் நீராடினார். 11 நாட்கள் கடுமையான விரதம் இருந்த பிரதமர் மோடி இன்று அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்று பூஜைகள் செய்தார். தாமரை மலர் கொண்டு பாதங்களில் வைத்து உணர்ச்சி பூர்வமாக வணங்கியுள்ளார் மோடி.
இது தொடர்பாக x சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், “தெய்வீக நிகழ்ச்சியில் பங்கேற்றது என் பாக்கியம். பால ராமர் பிராண பிரதிஷ்டை செய்தது உணர்ச்சிகரமான தருணம்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications