பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை எதிரொலி: வானில் சீறிப் பாய்ந்த போர் விமானங்கள்-தீவிர பயிற்சி!
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளும் சதித் திட்டம் தீட்டியவர்களும், கற்பனை செய்ய முடியாத தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் விமானப் படையின் ரஃபேல், சுகோய்-30 போர் விமானங்கள் இன்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டன.
பாகிஸ்தானுக்கு எதிரான மத்திய அரசு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அம்பாலா, ஹசிமரா விமான படை தளங்களில் இருந்து போர் விமானங்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டன. இந்த பயிற்சிகளில் ரஃபேல் போர் விமானங்களும் சுகோய் 30- ரக போர் விமானங்களும் பங்கேற்றன.
பாகிஸ்தான் மீதான பாலகோட் சர்ஜிகல் தாக்குதலில் நமது நாட்டின் விமானப் படைதான் மிக முக்கிய பங்கு வகித்திருந்தது. தற்போது ஆக்ரமன் (தாக்குதல்) என்ற பெயரில் விமானப் படையின் போர் விமானங்கள் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டிருப்பது நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த போர் பயிற்சிகளை விமானப் படை தலைமையகம் மிக உன்னிப்பாக கண்காணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல நாட்டின் கடற்படை வீரர்களும் ஏவுகணைகளை வீசி இலக்கை அழிக்கும் பயிற்சிகளை மேற்கொண்டனர். எல்லையில் போர் மேகம் சூழ்ந்த நிலையில் பாதுகாப்பு படையினரின் இந்த தீவிர நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக பீகார் மாநிலத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் தாக்குதல் என்பது நிராயுதபாணியான சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல; இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளும் இதற்கு சதி திட்டம் தீட்டியவர்களும், அவர்கள் கற்பனை செய்ய முடியாத தண்டனையை எதிர்கொள்வார்கள். பயங்கரவாதத்தின் எஞ்சியுள்ள பலத்தை அழிக்கும் காலம் வந்துவிட்டது. 140 கோடி இந்தியர்களின் மனஉறுதி தற்போது பயங்கரவாத குற்றம் புரிவோரின் முதுகெலும்பை முறித்துள்ளது. பயங்கரவாதி ஒவ்வொருவரையும் அவர்களுக்கு பின்பலமாக இருந்தவர்களையும் அவர்களுக்கு உதவி செய்தவர்களையும், கண்டறிந்து, பின் தொடர்ந்து இந்தியா தண்டனை வழங்கும். பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வை ஒருபோதும் சிதைக்க முடியாது; பயங்கரவாதம் தண்டிக்காமல் விடப்படக்கூடாது என எச்சரிக்கை
விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications