பல கோடி மக்கள் பயன்பெறும் 3 முக்கிய திட்டங்கள்.. மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
டெல்லி: அனைவருக்கும் பென்சன் உட்பட 3 முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அறிமுகம் செய்கிறார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், பல கோடி மக்கள் பலன் பெறும் வகையிலான பெரிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
இதன் முதல்படியாக ஏழைகளும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் கோடிக்கணக்கானோர் சேர்ந்தனர்.

அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வங்கிகள் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீடு வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டது.
இவை தவிர, மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தும் அனைவருக்கும் பென்ஷன் வழங்கும் திட்டம் குறித்தும் அறிவிக்கப்பட்டது. வங்கி கணக்கு வைத்திருப்போர் விபத்து, ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் மத்திய நிதித்துறை ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து பென்சன் திட்டம், விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு திட்டங்கள் பற்றிய அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியானது. இந்த திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
‘அடல் பென்ஷன் யோஜனா' என்ற பெயரில் பென்சன் திட்டம், பிரதான் மந்திரி ‘சுரக்ஷா பீமா யோஜனா' என்ற பெயரில் விபத்து காப்பீடு திட்டம், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா' என்ற பெயரில் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொடங்கி வைக்கிறார்.
விழாவில் மேற்கு வங்க கவர்னர் கேசரிநாத் திரிபாதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த்சின்ஹா, அரசு நகர்புற வளர்ச்சி மந்திரி பாபுல் சுப்ரியோ உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
நாடு முழுவதும் 115 நகரங்களில் நடைபெறும் தொடக்க விழாவில் அந்தந்த மாநில கவர்னர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் இந்த திட்டங்களின் தொடக்க விழா மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் தமிழக ஆளுநர் ரோசையா, மத்திய அமைச்சர்கள் ராதாமோகன் சிங், பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
நாளை தொடங்கப்படும் பென்சன் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் சேரலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடு செய்யலாம். ஆண்டு தோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்தி வந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை பென்சன் பெறலாம்.
விபத்து காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆண்டு தோறும் ரூ.12 பிரிமியம் செலுத்தி வந்தால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம். விபத்தினால் ஏற்படும் நிரந்தர உடல் செயல் இழப்பும் இதில் அடங்கும்.
அடுத்து 18 முதல் 50 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரலாம். இதற்கு ஆண்டு தோறும் ரூ.330 பிரிமியம் செலுத்த வேண்டும். இந்த பிரிமியம் செலுத்துவோருக்கு மரணத்துக்குப்பின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்கும். இவற்றுக்கான பிரிமியம் மற்றும் ஓய்வூதிய மாதாந்திர தொகை ஆகியவை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும்.
வங்கி கணக்கு வைத்திருக்கும் வயது தகுதி உடைய அனைவரும் இந்த 3 திட்டங்களிலும் சேரலாம். இதற்கான விவரங்களை கணக்கு வைத்திருக்கும் வங்கிகளை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்துக்கான படிவத்தை பெற்று நிரப்பிக் கொடுத்து திட்டத்தில் சேரலாம். இதற்கான முகாம்களும் நடைபெற உள்ளன. வங்கிகளை அணுகியும் விவரம் பெறலாம். 180042597777 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தும் விவரம் தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications