முதல் முறையாக மோடி அமெரிக்கா பயணம்- ஒபாமாவுடன் 29-ந் தேதி சந்திப்பு!
டெல்லி: பிரதமர் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி 29-ந் தேதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார்.
நரேந்திர மோடி மே மாதம் 26-ந் தேதி பிரதமராக பதவி ஏற்ற பிறகு உலக நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். பூடான், பிரேசில், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டார்.
அடுத்து அவர் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது.

விசா மறுப்பு
ஏனெனில், குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடந்த இனக்கலவரங்களை, அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அடக்க தவறிவிட்டார் என குற்றம் சாட்டி, அவருடைய விசாவை அமெரிக்கா கடந்த 2005-ம் ஆண்டு ரத்து செய்து விட்டது. அதன்பிறகு மோடி, அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை.

காட்சிகள் மாற்றம்
இந்த நிலையில், பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து காட்சிகள் மாறின.

ஒபாமா வாழ்த்து
மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது தேர்தல் வெற்றிக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தார். அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை மோடியும் ஏற்றுக்கொண்டார்.

அமெரிக்கா அமைச்சர்கள் சந்திப்பு
அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ராணுவ அமைச்சர் சக் ஹேகலும் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

5 நாள் சுற்றுப் பயணம்
இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார். முதலில் அவர் 26-ந் தேதி நியூயார்க் ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையம் சென்று இறங்குகிறார். மறுநாள் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.

நவாஸ் ஷெரீப் விருப்பம்
அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேச வாய்ப்புகள் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தொழில் அதிபர்களுடன் ஆலோசனை
ஆனால் இதில் மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. அமெரிக்க தொழில் அதிபர்களையும் மோடி சந்தித்து பேசுகிறார். அவர்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அப்போது அவர் அழைப்பு விடுக்கிறார்.

இந்தியர்களுடன் சந்திப்பு
28-ந் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் சதுக்க கார்டனில் அவர் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசுகிறார். இதில் 20 ஆயிரம் இந்தியர்கள் கலந்துகொள்கிறார்கள். மோடியின் இந்த உரையை அமெரிக்காவில் உள்ள 20 நகரங்களில் இந்தியர்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாஷிங்டனில் மோடி..
அதன் பின்னர் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அளிக்கிற தனிப்பட்ட விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 29-ந் தேதி பிரதமர் மோடி, வாஷிங்டன் செல்கிறார். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு மறுநாளும் தொடர்கிறது.

புறக்கணிப்பு முடிவு
மோடியும், ஒபாமாவும் தொடர்ந்து 2 நாட்கள் சந்தித்து பேசுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மோடியின் இந்த பயணம், 9 ஆண்டுகளாக அவரை அமெரிக்கா புறக்கணித்து வந்ததை முடிவுக்கு கொண்டு வருகிறது.

வெள்ளை மாளிகை..
இது தொடர்பாக அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில், வெள்ளை மாளிகையில் 29-ந் தேதியும், 30-ந் தேதியும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று, சந்திப்பதில் ஜனாதிபதி ஒபாமா ஆர்வமாக இருக்கிறார். இரு நாட்டு மக்களுக்கும், உலகுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம் கொண்டுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications