கோவையில் திமுக, பாஜக ஆதரவு டிவிட்டர் பயனாளிகள் மீது வழக்குப்பதிவு; பொள்ளாச்சி, மதுரையில் மேலும் கைதுகள்
பகைமையைத் தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக கோவையில் திமுக ஆதரவு டிவிட்டர் கணக்கு ஒன்றின் மீதும் மற்றும் பாஜக ஆதரவு டிவிட்டர் கணக்கு ஒன்றின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், டீசல் ஊற்றி இந்து அமைப்பினர் வீட்டில் இருந்த வாகனங்களை எரித்ததாக பொள்ளாச்சியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் மதுரையில் மூன்றாவது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
கோவையில் சமீபத்திய தகவல் என்ன ?
கோவையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றமான சூழலைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் கைதுக்கு பின்னரே பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வீறுகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய் பாட்டில் குண்டுகள் வீசப்பட்ட நிகழ்வுகளுக்கு பின் கோவை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிகழ்வதாக தமிழ்நாடு பாஜக கூறுகிறது.
- தமிழ்நாட்டில் நடக்கும் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள்: பயன்படுத்திக்கொள்ளுமா பாஜக?
- கோவை மண்ணெண்ணெய் குண்டு வழக்கில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் இருவர் கைது - நடந்தவை என்ன?
- மண்ணெண்ணெய் குண்டு சம்பவங்கள்: திருமாவளவன், சீமான் எழுப்பிய சந்தேகமும், ஐ.ஜி. எச்சரிக்கையும்
இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மூலமாக பதற்றத்தை தூண்டும் விதமாகவும் இரு சமூகங்கள் இடையே பிரிவினையை தூண்டும் விதமாகவும் பதிவிட்டால் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்ட சைபர் குற்ற காவல்துறை இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. கோவை பாலு என்கிற பாஜக ஆதரவு டிவிட்டர் கணக்கின் பயனாளர் மீதும் பிரகாசம் என்கிற திமுக ஆதரவு டிவிட்டர் கணக்கின் பயனாளர் மீதும் பகைமையை தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் 294 பி, 507 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் 3 பேர் கைது
பொள்ளாச்சியில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளில் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியது மற்றும் டீசல் ஊற்றி எரித்தது தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளில் 26 வயதாகும் முகமது ரபிக், 36 வயதாகும் ரமீஸ் ராஜா, 32 வயதாகும் மாலிக் என்கிற சாதிக் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சுமார் 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும், 500க்கும் மேற்பட்டவர்கள் செல்பேசி எண்களை ஆய்வு செய்து இந்தக் கைதுகள் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.
மதுரையில் மேலும் ஒருவர் கைது
மதுரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேந்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை.
சனிக்கிழமை இரவு, அனுப்பானடி பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கிருஷ்ணன் வீட்டின் காரின் செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை பற்ற வைத்து எரிய விட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழத்துரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் டவர் ஆகியவற்ற ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய சம்பட்டி புரம் பகுதியை சேர்ந்த உசைன் மற்றும் நெல்பேட்டை பகுதியைச் சார்ந்த சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மாபாளையத்தை சார்ந்த அபுதாகிர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு முன்பு குற்றவாளிகள் மூவரும் செல்போனில் இது குறித்து பேசியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் அவர்கள் எந்த அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை போலீசார் வெளியிடவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














Click it and Unblock the Notifications