சபரிமலையில் பெண்களிடம் 'சில்மிஷம்'- போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: புண்ணிய பூமியாக கருதப்படும் சபரிமலையில் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர்.
பெண்களுக்குத் தடை:
சபரிமலையில் 10 வயதுக்கும், 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேல் ஆன பெண்களும் மட்டுமே இங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகாரி சில்மிஷம்:
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் சபரிமலை தரிசனத்திற்கு சென்ற பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் 18 ஆம் படி அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
பெண்கள் புகார்:
பாதிக்கப்பட்ட ஏராளமான பக்தர்கள் இது குறித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறினர். இதையடுத்து நடத்திய விசாரணையில் பெண் பக்தர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது திருவனந்தபுரம் ஆயுதப்படையில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் ஜஹாங்கீர் என தெரியவந்தது.
மாற்றப்பட்ட அதிகாரி:
இதையடுத்து அவர் உடனடியாக 18 ஆம் படி பகுதியிலிருந்து மாற்றப்பட்டு வேறு பகுதியில் நியமிக்கப்பட்டார். இந்த பிரச்னையை உயரதிகாரிகள் தலையிட்டு மூடிமறைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நுண்ணறிவுத் துறை ஏ.டி.ஜி.பி. ஹேமச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
குறும்பு செய்தது உண்மைதான்:
இது குறித்து விசாரணை நடத்த தனிப்பிரிவு போலீசுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் ஜஹாங்கீர் பெண் பக்தர்களிடமும் சிறுமிகளிடமும் சில்மிஷம் செய்தது உண்மை தான் என தெரியவந்தது.
சில்மிஷ அதிகாரி சஸ்பெண்ட்:
மேலும் ஜஹாங்கீரை சபரிமலையில் வேறு இடத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமித்திருந்ததாகவும் ஆனால் அவர் அதை மீறி 18ம் படி அருகே பணியில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஜஹாங்கீரை சஸ்பெண்ட் செய்ய ஆயுதப்படை கமாண்டன்ட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications