டெல்லியில் 'மண் சோறு' சாப்பிட்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா!
29வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டக்களத்திற்கு நேரடியாக சென்று பிரேமலதா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 29வது நாள் போராட்டத்தில் தேமுதிக சார்பில் பிரேமலதா விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களோடு மண் சோறு சாப்பிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 29வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நூதனப் போராட்டம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். பாம்பு கறி, எலி கறி தின்று தங்களது கொடுமையான சூழலை அரசிற்கு எடுத்துரைக்க முயன்றனர்.

மண் சோறு
அந்த வகையில் இன்று விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டு தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் தரையில் சோற்றை போட்டு விவசாயிகள் உண்டனர்.

பிரேமலதா ஆதரவு
இந்நிலையில், இன்று டெல்லி சென்ற பிரேமலதா விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது விவசாயிகளுக்கு நல்ல தீர்வு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று கூறினார்.

மண் சோறு சாப்பிட்ட பிரேமலதா
விவசாயிகளை சந்தித்த போது, பிரேமலதாவும் விவசாயிகளோடு உட்கார்ந்து மண் சோற்றை உண்டார். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் துன்பம் துடைக்கப்பட வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications