'கொலிஜியம்' முறைக்கு பதிலாக 'நீதிபதிகள் நியமன ஆணையம்'- மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!
டெல்லி: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான 'கொலிஜியம்' முறைக்கு பதிலாக 'நீதிபதிகள் நியமன ஆணையத்தை" உருவாக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில், நீதிபதிகளை நியமிப்பதற்கு பின்பற்றப்படும் "நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக் குழு' (கொலிஜியம்) முறைக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கொலிஜியத்துக்குப் பதிலாக "நீதிபதிகள் நியமன ஆணையத்தை' ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக அரசியல் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நிறைவேற்றியது.
அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதி மாநிலங்களின் ஒப்புதல் அவசியமாகும். எனவே, அந்த மசோதாவை மாநிலங்களின் ஒப்புதலுக்காக ராஜ்யசபா செயலாளர் அனுப்பி வைத்தார். இந்த மசோதாவுக்கு 29 மாநிலங்களில் 16 மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன.
பின்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அதைப் பரிசீலித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
"கொலிஜியம்' முறைக்குப் பதிலாக புதிதாக ஏற்படுத்தப்படும் நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர், 2 முக்கிய பிரமுகர்கள், சட்ட அமைச்சர் ஆகியோரும் இந்த ஆணையத்தில் இடம்பெற்றிருப்பர்.












Click it and Unblock the Notifications