கையை மீறிய கலவரம்.. கப்சிப் பாஜக? மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி.. காரணம் இதுதான்!
இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாதவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கடுமையான விமர்சனங்களை மத்திய அரசு எதிர் கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவது ஒன்றும் இது முதல்முறை கிடையாது. கடந்த 23 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றுதான் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியில் மணிப்பூர் வந்திருக்கிறது.

பிரச்சனை என்ன?
மணிப்பூர் அடிப்படையில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலமாக இருக்கிறது. இருப்பினும் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் பெரும்பான்மையாக பழங்குடியினர் அல்லாதோர்தான் இருக்கிறார்கள். அதாவது, மாநிலத்தில் குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட பழங்குடி மக்கள் 47 சதவிகிதமும், மெய்தி உள்ளிட்ட பழங்குடியினர் அல்லாத மக்கள் 53 சதவிகிதமும் வசித்து வருகின்றனர். பழங்குடியினரை தவிர, மற்றவர்களுக்கு இங்குள்ள மலை பகுதிகள் மீது உரிமை கொண்டாட முடியாது. ஆனால், பழங்குடி அல்லாதோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த எதிர்ப்பை பாஜக தனது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொண்டாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதாவது நிலத்தின் மீது உரிமை கொண்டாட, 53 சதவிகிதமாக உள்ள மெய்தி மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை பாஜக தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. கோரிக்கை பெரும்பான்மை மக்கள் மத்தியில் வேலை செய்ய தொடங்கியது.
2022ம் ஆண்டு அம்மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், பிரேன் சிங் தலைமையிலான பாஜக வெற்றி பெற்றது. பிரேன் சிங் முதலமைச்சரானார். பழங்குடி அல்லாத மக்களும் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்த தொடங்கினர். நீதிமன்றத்திலும் இது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தலை வழங்கியது. இதுதான் வன்முறையின் தொடக்கப்புள்ளி.
2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை இப்போது வரை நீடித்து வருகிறது. காவல்துறையினர் ஆயுத கிடங்கை வன்முறையாளர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று போலீஸ் அசால்ட்டாக சொன்னது. ஆனால் ஆயுதங்களை திரும்பப்பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
துப்பாக்கி முனையில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். கொலைகள் நடந்தன. மொத்தம் 258 பேர் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்றும், உயிரிழப்புகள் குறித்து நியாயமான ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் சென்று அம்மாநில மக்களை சந்திக்க வேண்டும். வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது வரை பிரதமர் மணிப்பூருக்கு போகவில்லை.
வன்முறையை கட்டுப்படுத்தாதது, பிரதமர் மணிப்பூருக்கு போகாதது உள்ளிட்டவைததான் கடும் விமர்சனங்களாக இருந்து வந்தது. இப்போது மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பதவி விலகியுள்ளதும், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது இந்த விமர்சனங்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது, மத்திய அரசின் தோல்வியைதான் இது காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் பேச தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications