"மைக் இல்லையா.. பிரச்சனை இல்லை.." மொபைல் டார்ச் வெளிச்சம் போதும்.. வேன் மீது ஏறி பிரியங்கா அதிரடி
லக்னோ: ரேபரேலி தொகுதியில் மைக் இல்லாததால் பிரியங்கா காந்தி வேன் மீது ஏறி பிரச்சாரம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நடக்கிறது. இதில் 80 தொகுதிகளைக் கொண்ட உபி மாநிலத்தில் சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

அங்கு ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ராகுல் காந்திக்கு ஆதரவாக அவரது சகோதரி பிரியங்கா தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.
பிரியங்கா காந்தி: இதற்கிடையே ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்யும் போது, மைக் இல்லாததால் திடீரென வேன் மீது ஏறி பிரச்சாரம் செய்தார். அங்குப் போதியளவு லைட் கூட இல்லாத நிலையில், அவர் மொபைல் லைட் வெளிச்சத்திலேயே பொதுமக்களிடம் உரையாற்றினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ராகுல் காந்தி இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டுமின்றி காங்கிரஸ் கோட்டையான உபி மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், ரேபரேலி தொகுதியில் வரும் மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி நாடு முழுக்க இந்தியா கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்யும் நிலையில், ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
வேன் மீது ஏறி பேச்சு: அதன்படி நேற்று துல்வாச என்ற பகுதியில் பிரியங்கா காந்தி பேசுவதாக இருந்தது. ஆனால், அவர் பிரச்சாரத்திற்குச் சென்ற போது மைக் இல்லை. மேலும், போதிய லைட் கூட இல்லை. இருப்பினும், பிரியங்கா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.. மளமளவென வேன் மீது ஏறிய அவர், மைக் இல்லாமலேயே துணிச்சலாகப் பேசி வாக்கு சேகரித்தார். அங்கு விளக்குகளும் இல்லாத நிலையில், கூடி இருந்த பொதுமக்கள் தங்கள் மொபைல்களில் லைட்டை அடித்தனர்.
ரேபரேலி மக்கள் எப்போதும் அரசியல் தலைவர்களை நன்கு புரிந்து கொண்டுள்ளவர்களாக உள்ளதாகக் கூறிய பிரியங்கா காந்தி, மோடி அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் மேலும் பேசுகையில், "ரேபரேலி மக்கள் புத்திசாலிகள்.. இந்திரா காந்தியின் சில கொள்கைகள் பிடிக்காதபோது, அவரையும் தோற்கடித்தனர்.
கோபப்படவில்லை: அப்போது இந்திரா கோபப்படவில்லை.. மாறாகத் தன்னை தானே சுயபரிசோதனை செய்துகொண்டார். அதன் பின்னரே நீங்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுத்தீர்கள். தலைவர்களை மிகச் சரியாகப் புரிந்துகொள்வதே ரேபரேலி மக்களின் சிறப்பு.
இப்போது பாஜக என்ன செய்கிறது எனப் பாருங்கள். ஒட்டுமொத்த பாஜக இயந்திரமும் பொய்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளது.. பாஜக மதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.. சாதியைப் பற்றிப் பேசுகிறார்கள்.. கோயில்- மசூதி குறித்து எல்லாம் பேசுகிறார்கள்.. ஆனால் மக்கள் தொடர்பான உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பாஜக பேச மறுக்கிறது.
இருள்: இந்த தெருவில் எப்படி இருள் சூழ்ந்து இருக்கிறதோ.. அதேபோலத் தான் பொதுமக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் மக்களின் வாழ்க்கையும் இருளில் மூழ்கிவிடும்" என்று அவர் பேசினார்.
ரேபரேலி தொகுதி: ரேபரேலி தொகுதியைப் பொறுத்தவரை அங்கு காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெரோஸ் காந்தி தொடங்கி இந்திரா காந்தி, சோனியா காந்தி என நேரு குடும்பத்தினர் பலரும் இங்குப் போட்டியிட்டு வென்றுள்ளனர். கடந்த தேர்தலில் சுமார் 1.67 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சோனியா காந்தி வென்றார். இந்த முறை உடல்நிலை காரணமாகச் சோனியா காந்தி ராஜ்யசபாவில் இருந்து எம்பியாக தேர்வாகி உள்ள சென்றுவிட்ட நிலையில், ராகுல் காந்தி அங்குக் களமிறங்குகிறார். பாஜக சார்பில் அங்கு தினேஷ் பிரதாப் சிங் என்பவர் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications