ஜம்மு காஷ்மீரில் பிரசாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி! நிச்சயம் வெற்றி பெறுவோம் என சூளுரை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது. இன்று ராகுல் காந்தி தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இங்கு நிச்சயம் வெற்றிபெருவோம் என்று அவர் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரசாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. காங்கிரஸ் இன்று தனது முதல் கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறது. ஜம்மு காஷ்மீரின், ராம்பன் மற்றும் அனந்தநாக் மாவட்டங்களில் ராகுல் காந்தி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
ராம்பன் மாவட்டத்தின் பனிஹால் தொகுதியில் போட்டியிடும், ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விகா் ரசூல் வாணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர்,
"இங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது, அதுதான் நடக்கும். எங்களின் முதல் பணியாக அனைத்து அரசு காலி பணியிடங்களையும் நிரப்பி, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம். 40 வயதில் இருந்தாலும் கூட அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அவர்களின் ஊதியமும் அதிகரிக்கப்படும். ஜம்மு காஷ்மீர் அரசை எல்லோரும் சேர்த்து நடத்துவதே எங்கள் குறிக்கோள். அனைவரும் மதிக்கப்பட வேண்டும், முன்னேற்றப் பாதையில் அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அனந்தநாக் மாவட்டத்தின், தூரு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் குலாம் அகமது மிர்ரை ஆதரித்தும் ராகுல் காந்தி வாக்கு சேகரிக்கிறார். அதன் பின்னர் இன்று இரவு டெல்லி செல்கிறார்.
தேர்தல் தேதி: முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
காங்கிரஸ் வியூகம்: ஜம்மு காஷ்மீரில் பாஜகவை வெறும் 20 தொகுதிக்குள் முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. இதன் அடிப்படையில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து, தொகுதி பங்கீட்டையும் முடித்திருக்கிறது. இருப்பினும், மாநாட்டு கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் உள்ள சர்ச்சைக்குரிய அம்சங்களை, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக திருப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications