கைவிட்ட அமேதி.. கை கொடுத்த வயநாடு.. 2019 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி வென்றது எப்படி தெரியுமா?
கேரளா: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இந்த முறையும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. மொத்தம் 39 வேட்பாளர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக கேரளாவில் மட்டும் 16 தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் ராகுல் காந்தி, சசிதரூர் உள்ளிட்ட ஸ்டார் வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. சசிதரூர் தற்போது திருவனந்தபுரம் தொகுதி எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் அவருக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியும் மீண்டும் கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார். மொத்தம் 14 சிட்டிங் எம்.பிக்களே மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
4.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: ராகுல் காந்தியை பொறுத்தவரை இந்த முறை வயநாடு தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் கட்சியினர் மத்தியில் இருந்தது. ஏனெனில், அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் பரபரப்பாக பேசியதால், வயநாடு தொகுதியில் போட்டியிடுவாரா.. மாட்டாரா என்ற பேச்சு பரபரப்பாக எழுந்தது.
இந்த நிலையில் தான் இன்று வெளியிடப்பட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வயநாடு தொகுதியில் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியை பொறுத்தவரை ராகுல் காந்திக்கு கடந்த முறை இமாலய வெற்றியை கொடுத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிபி சுனீரை விட 4.3 லட்சம் வாக்குகள் கூடுதலாக ராகுல் காந்தி பெற்றார்.
ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி: வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த 2009 முதல் காங்கிரஸ் கட்சியே அங்கு வென்று வருகிறது. கடந்த தேர்தலில் ராகுல் காந்தி 7,05,034 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ் கட்சி வேட்பாளர் 27,3971 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
அந்த வகையில் அமேதி தொகுதியில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தாலும் வயநாடு தொகுதி அவருக்கு கை கொடுத்தது. எனவே, இந்த முறையும் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா. போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications