ஜம்மு- காஷ்மீரில் பேய் மழைக்கு 120 பேர் உயிரிழப்பு: மீட்புப்பணியில் ராணுவம்
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் சிக்கி சுமார் 120க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. ஆற்றில் அபாய எச்சரிக்கை அளவைவிட 4 அடி உயரத்திற்கு நீர் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு
அதேபோல் காம்பீர் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான மாவட்டங்களில், தரைவழி போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

அபாயகட்டத்தைத் தாண்டி
அனந்தநாக், காஷ்மீர், பூஞ்ச், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்து உள்ளது. ஜீலம் நதியின் நீரோட்டம், அபாய கட்டத்தை தாண்டி ஓடுவதால், அப்பகுதிவாசிகள், ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

உயிரிழப்புகள்
இந்நிலையில், இதுவரை அங்கு மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 120 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வியாழக்கிழமையன்று, சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும், காணாமல் போயினர். அவர்கள், 50 பேரும் பலியாகியிருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு
வெள்ளிக்கிழமையன்று ரஜோரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட கன மழையில் வீடு, இடிந்து விழுந்ததில் 16 பேர் இறந்தனர். ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்திற்கு அடித்து வரப்படும் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

நடுவழியில் தத்தளிப்பு
ஜம்மு பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால், அவ்வழியில் பயணித்த, 1,200க்கும் மேற்பட்ட வாகனங்கள் நடுவழியில் தத்தளிக்கின்றன.

ராணுவம் மீட்பு
மாநில வெள்ள நிலைமையை, முதல்வர் ஒமர் அப்துல்லா, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ராணுவ உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே, விமானப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மழை நீடிக்கும்
இதற்கிடையே, மாநிலத்தில், அடுத்த, 72 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்

சிந்து நதியிலும் வெள்ளம்
இதனிடையே சிந்து நதியில் நீரின் அளவு அபாய அளவை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிந்து நதியின் கிளைகள் பாயும் மத்திய காஷ்மீர் பகுதி மக்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கின
ஸ்ரீநகர் வழியாக பாயும் ஜீலம் மற்றும் தூத் கங்கா ஆறுகளில் அபாயகட்டத்தை தாண்டியும் வெள்ளம் செல்வதால், ஸ்ரீநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய 9 ராணுவ வீரர்கள்
புல்வாமா மாவட்டத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 9 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 7 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் மாயமானதாக தகவல் வெளியானது.

விமான நிலையம் மூடல்
பல இடங்களில் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் விமான நிலையம் மூடப்பட்டது.

அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு
எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணிகளையும் ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தையும் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் பார்வையிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications