ஈரல் பாதிப்பால் அவதி.. ரஜினி சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சித்தராமையா மகன் மாற்றம்?
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ், திடீர் உடல் நலக்குறைவால், பெல்ஜியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க குடும்பத்தார் யோசித்து வருகிறார்கள்.
சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் தனது நண்பர்கள் சிலருடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்.
பெல்ஜியத்தில் அவர் பயணம் மேற்கொண்டிருந்தபோது, திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சீரியசான நிலைமையில் பிரசல்ஸ்சிலுள்ள அன்ட்வெர்ப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பெல்ஜியம் சென்ற சித்து
இந்நிலையில் வியாழக்கிழமை காலை 4 மணி விமானத்தில் பெல்ஜியம் புறப்பட்ட சித்தராமையா, உடன் தனது குடும்ப டாக்டர் ரவியையும் அழைத்து சென்றார்.

தூதரக அதிகாரி உதவி
பெல்ஜியம் மருத்துவமனையில் மகனை நேரில் பார்த்த சித்தராமையா, டாக்டர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார். பெல்ஜியத்தில் இந்திய தூதரக அதிகாரி சித்தராமையாவுக்கு வேண்டிய உதவிகளை செய்தார்.

சிங்கப்பூர் சிகிச்சை
சிகிச்சைக்கு ராகேஷ் உடல் ஒத்துழைக்க ஆரம்பித்துள்ளதாக டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஈரல் தொடர்பான பிரச்சினை என்பதால் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் ராகேஷை மேல் சிகிச்சைக்காக சேர்க்க சித்தராமையாவுக்கு கர்நாடக மூத்த டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளனராம்.

ரஜினி, அம்பரீஷ் சிகிச்சை
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில்தான் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று நலமானார். அதேபோல, கர்நாடக அமைச்சராக இருந்தவரும் நடிகருமான அம்பரீஷும், அதே மருத்துவமனையில், ரஜினி ஆலோசனையின்பேரில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். சித்தராமையாவும் தனது மகனை மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி மனிதாபிமானம்
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிகிச்சைக்கு வேண்டிய உதவியை செய்வதாக கூறியுள்ளார். பெல்ஜியதத்தில் மகனுக்கு நல்ல சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மாசுவராஜை சித்தராமையா நாடியிருந்தார். இந்த தகவலை அறிந்து கர்நாடகத்தில், அரசியல் எதிரியாக இருந்தாலும் சித்தராமையாவை மோடி அழைத்து பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications