தெற்கிலிருந்து வடக்கே போன சூரியன்– திருப்பதியில் ரதசப்தமி விழா கொண்டாட்டம்
திருமலை: திருப்பதியில் ரத சப்தமியையொட்டி நேற்று ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல இந்த ஆண்டும் ரத சப்தமி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வண்ணம் பொங்கிய கோவில்:
சூரியன் தென் பகுதியிலிருந்து வடபகுதியை நோக்கி பயணம் செய்வதன் தொடக்கமே ரதசப்தமி விழாவாகும். இதனையொட்டி கோவில் முழுவதும் 600 கிலோ வண்ண, வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சூரிய பிரபை வாகனம்:
விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் வீதிஉலா வந்தார்.
விண்ணை முட்டிய பக்தர்கள் கோஷம்:
சூரிய பிரபை வாகனம் கிழக்கு மாடவீதிக்கு வந்ததும், சூரிய ஜெயந்தி விழா நடைபெற்றது. உற்சவரான மலையப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சூரிய கதிர்கள் நேரடியாக உற்சவர் மலையப்பசாமியின் தலை, மார்பு, பாதம் ஆகியவை மீது விழுந்தவுடன், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று விண்ணை மூட்டும் அளவிற்கு கோஷமிட்டனர்.
சிறிய சேஷ வாகனம்:
அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலாவும், பகல் 11 மணியில் இருந்து 12 மணிவரை தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலாவும், பிற்பகல் 1 மணியில் இருந்து 2 மணிவரை அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலாவும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மலையப்பனுக்கு சக்கரஸ்நானம்:
பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரை கோவில் அருகில் உள்ள தெப்ப குளத்தில் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா வந்தார்.
சந்திர பிரபை வாகனம்:
மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனத்தில் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதிஉலாவும், இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலாவும் நடைபெற்றது.


Click it and Unblock the Notifications
