மன்மோகன் சிங்குக்கு பதில் ராகுல் காந்தி.. காங்கிரஸை காப்பாற்ற முடியுமா?
டெல்லி: மீண்டும் தாம் பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்திக்கு பிரதமராக அனைத்து தகுதிகளும் என்று அறிவித்திருப்பதன் மூலம் 'ஓய்வு' அறிவிப்பை பகிரங்கப்படுத்தியிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.
கடந்த 10 ஆண்டுகாலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்து வருகிறார். ஆனால் ஐமு அரசின் கடைசி காலகட்டத்தில் காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது என்பதை நாடு கண்டது.
கிரிமினல் எம்;பிக்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் தலைமையிலான கேபினட் அமைச்சரவை அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்தது முட்டாள்தனமானது என்று விமர்சித்ததையும் இந்த நாடு பார்த்தது. இப்போது இனி 3 வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க மாட்டேன் என்று மன்மோகன்சிங் சொல்வதையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆரூடங்கள்..
எதிர்வரும் லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்காது என்பது கண்காணிப்புகள் அனைத்துமே முன்வைக்கிற திடமான கருத்து. 100 தொகுதிகளைக் கூட காங்கிரஸால் கைப்பற்ற முடியாது என்கிறது பாஜக. புதிய வரவான ஆம் ஆத்மியோ 50 தொகுதி கூட கிடைக்காது.. மன்மோகன்சிங்கே, ஆம் ஆத்மிக்குத்தான் ஓட்டுப் போடுவார் என்று கிண்டலடிக்கின்றனர்.

மோடி விஸ்வரூபம்
காங்கிரஸுக்கு மாற்றுதான் நரேந்திர மோடிதான்., நாடு முழுவது மோடி அலை வீசுகிறது என்று லோக்சபா தேர்தலுக்கு முன்பே ஒரு பிரளயம் கிளப்பிவிட அதுவும் சில காலம் பூதாகரமாகிக் கொண்டிருந்தது.

புரட்டிப் போட்ட ஆத்மி
ஆனால் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பின்னர் மோடி அலையும் புஸ்வானமாகி இப்போது கெஜ்ரிவால் கோஷம் விண்ணைப் பிளக்கிறது. நாடெங்கும் ஆம் ஆத்மியின் பெயர் உச்சரிக்கப்படும் சொல்லாகிக் கிடக்கிறது.

மன்மோகன்சிங் திட்டவட்டம்
இந்த நிலையில்தான் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன்சிங், தாம் மீண்டும் பிரதமராகப் போவதில்லை.. காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்திதான் பிரதமராக அனைத்து தகுதிகளையும் கொண்டவர் என்று கூறியிருக்கிறார்.

ராகுல் சரியா?
காங்கிரஸ் தொண்டர்களைப் பொறுத்தவரை ராகுல்தான் சரியான தேர்வாக இருக்க முடியும்.. ஆனால் காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரையில் அங்கு அரைடஜன் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டும் வருகின்றனர்.

ராகுல் வந்தால்..
சீனியரான மன்மோகன் மற்றும் இன்னபிற பிரதமர் கனவு வேட்பாளர்களுக்குப் பதிலாக ராகுல், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் காங்கிரஸ் கட்டமைப்பில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.

அடிப்படை மாறாது..
கட்டமைப்புகளை மாற்றிக் காட்ட முயற்சிக்கும் ராகுல் காந்தியால், காங்கிரஸ் கட்சியின் தோல்விகளுக்கான அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எளிதானதாக இல்லை.. தமிழகத்தைப் பொறுத்தவரையில் வெகுஜனமக்களின் கருத்துகளுக்கு விரோதமானதாகவே காங்கிரஸ் கட்டமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாநில உணர்வுகளுக்கு எதிராகவே காங்கிரஸ் அடிப்படையிலேயே இருந்தால் நிச்சயம் தேறுவது கடினம்..
அதே நேரத்தில் தேர்தலில் காங்கிரஸ் முதலில் வெல்லட்டும் என்ற பலமான எதிர்ப்பு குரல்தான் நாடு முழுவதும் எதிரொலிப்பதையும் யாரும் தவிர்த்துவிடவும் முடியாது. மன்மோகனுக்குப் பதில் ராகுல் என்பது காங்கிரஸுக்கு மகிழ்ச்சியான முழக்கமாக இருந்தாலும் வாக்காளர்கள்தான் தீர்மானிக்க போகிறார்கள்..












Click it and Unblock the Notifications