‛யாருமே எதிர்பார்க்கல’.. திடீரென நடன கலைஞரின் காலை தொட்டு வணங்கிய ஹரியானா பாஜக முதல்வர்! பின்னணி
சண்டிகர்: ஹரியானாவில் இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் இருந்து திடீரென இறங்கிய பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், நடன கலைஞரின் காலை தொட்டு ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
இன்று நாம் 75வது குடியரசு தினவிழாவை கொண்டாடி வருகிறோம். இந்த விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமை பாதையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்று தேசியக்கொடி ஏற்றினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழாவில் இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் நடந்தது. அதன்பிறகு மாநிலங்கள் வாரியாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது.
அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். சென்னையில் ஆளுநர் ஆர்என் ரவி கொடியேற்றினார். பாஜக ஆட்சி செய்யும் ஹரியானாவிலும் குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக நடந்தது.
கார்னாலில் நடந்த இந்த விழாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்றார். மேடையில் அவர் அமர்ந்திருந்தார்.
இந்த வேளையில் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. அப்போது கலைஞர் ஒருவர் கடவுள் ராமரின் வேடம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதை மேடையில் இருந்து முதல்வர் மனோகர் லால் கட்டார் ரசித்தார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் மேடையில் இருந்து திடீரென்று இறங்கினார். பாதுகாப்பு வளையத்தை தாண்டி ராமர் வேடம் அணிந் நடனமாடிய கலைஞர் அருகே சென்ற முதல்வர் மனோகர் லால் கட்டார் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாஜகவை பொறுத்தமட்டில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் மிகவும் உறுதியாக இருந்து வந்தது. 2019 உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த 22ம் தேதி பிரதிஷ்டை விழாவும் முடிவடைந்தது. கோவிலில் உள்ள 5 வயது பால ராமர் சிலையை பொதுமக்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் தான் மனோகர் லால் கட்டார் ராமர் வேடம் அணிந்த கலைஞரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications