இந்தியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ்.தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்...கொடியேறி பாலகிருஷ்ணன் 'பொளேர்'
கொச்சி: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கம், உலகின் மிக கொடூரமான பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு சமமானது என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.
மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி எழுதிய ‘பாகிஸ்தான் வெளியுறவு கொள்கையில் என் பார்வை பருந்தோ, புறாவோ அல்ல‘ என்ற புத்தக வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்த பா.ஜ.க முன்னாள் தலைவரும்,எல்.கே.அத்வானியின் உதவியாளருமான சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனா அமைப்பினர் கருப்பு மை வீசினர். இதற்கு பா.ஜ.க.,காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கடுமையாக விமரிசித்துள்ள கொடியேறி பாலகிருஷ்ணன், ஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு எதிரான முஸ்லிம்கள் மீது அந்த அமைப்பு எவ்வாறு தாக்குதல் நடத்தி வருகிறதோ, அதே போன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கம், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்றார்.
மேலும் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு மதச்சார்பின்மைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் உருவாகி உள்ளது; ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அடுத்த இலக்காக பட்டியல் இனத்தவர், பழங்குடி சமுதாயத்தினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே உள்ளனர். அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்.நெருக்கடி கொடுக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


Click it and Unblock the Notifications
