கப்சிப்னு இருங்க.. ஆதரவாளர்களுக்கு சச்சின் பைலட் கோரிக்கை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ராஜஸ்தானில் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
போராட்டம் எதிலும் ஈடுபடக் கூடாது, வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று தனது ஆதரவாளர்களுக்கு சச்சின் பைலட் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் யாரும் ஈடுபடக் கூடாது, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் பைலட் கேட்டுக் கொண்டுள்ளார்.

கராலி என்ற ஊரில் சச்சின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சச்சின் டிவீட் மூலம் ஆதரவாளர்கள் அமைதி காக்க கோரியுள்ளார். அதில் கட்சித் தலைமை மீது நம்பிக்கை உள்ளது. யார் முதல்வர் என்பதை ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் முடிவு செய்வார்கள். கட்சியின் கெளரவத்தைக் காக்க வேண்டியது நமது கடமை. அதிலிருந்து யாரும் தவறக் கூடாது என்று கூறியுள்ளார் பைலட்.
மூத்த தலைவரான அசோக் கெலாட் மற்றும் இளம் தலைவரான பைலட் ஆகியோரில் யாரை முதல்வராக்குவது என்பதில் கட்சித் தலைமை பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. காரணம் இருவரும் பல்வேறு வகையிலும் முக்கியமானவர்களாக உள்ளனர்.
லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு அனுபவம் வாய்ந்த கெலாட்டை முதல்வராக்க கட்சித் தலைமை நினைக்கிறது. தலைவர்கள் ஆதரவு கெலாட்டுக்கு உள்ளது. ஆனால் எம்எல்ஏக்கள் ஆதரவு பைலட்டுக்கு உள்ளது. இதனால் அவரும் விட்டுத் தர மாட்டேன் என பிடிவாதமாக உள்ளார். இதனால்தான் குழப்பம் தீராமல் உள்ளது.












Click it and Unblock the Notifications