மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: சாத்வி பிரக்யாவின் ஜாமீன் மனு அதிரடி தள்ளுபடி
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யாவின் ஜாமீன் மனுவை தேசிய புலனாய்வு ஏஜென்சி நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர். இந்த வழக்கில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கை மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அண்மையில் தேசிய புலனாய்வு ஏஜென்சியானது அண்மையில் சாத்வி பிரக்யாவுக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இல்லை எனக் கூறியது.
இதனைத் தொடர்ந்து சாத்வி பிரக்யா சார்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே மாலேகான் குண்டுவெடிப்பில் மகனை பறிகொடுத்த சையத் நிசார், நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில் சாத்வி பிரக்யாவுக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இல்லை என தேசிய புலனாய்வு ஏஜென்சியின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டாலும் அது குறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்; அதுவரை சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று சாத்வி பிரக்யாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீபத் தெகாலே, சாத்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications