சொத்து குவிப்பு வழக்கு- ஜெ. மனு டிஸ்மிஸ்! இறுதிவாதம் 19-ந் தேதி தொடங்க பெங்களூர் கோர்ட் உத்தரவு!!

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்தார் என்ற வழக்கு பல ஆண்டுகாலமாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் பல இழுத்தடிப்புகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய "லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ்" என்ற நிறுவனமானது தமது சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கானது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்குப் போனது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையே கர்நாடகா உயர்நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற லெக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு மனு மீது இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையே லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், "லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் தொடர்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து முடித்த பிறகுதான் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும். அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் தடை
இந்த மனுவானது மே 26ந் தேதி நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சிக்ரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 6ந் தேதி வரை தடை விதித்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான சிவில் வழக்குகள் விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 6ந் தேதி நடைபெற்ற விசாரணையில் இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க உத்தரவிடக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அம் மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் 13ந் தேதிக்குள் ஜெயலலிதா மற்றும் தமிழக ஊழல் தடுப்பு பிரிவு பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஜெ. மனு டிஸ்மிஸ்
இவ்வழக்கு நேற்று விடுமுறைக் கால நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை கோரிய ஜெயலலிதாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதாவது லெக்ஸ் நிறுவனம் தொடர்ந்திருப்பது சிவில் மனு; ஆனால் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கோ கிரிமினல் வழக்கு. சிவில் மனுவுக்காக கிரிமினல் வழக்கின் விசாரணையை நிறுத்த முடியாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இது ஜெயலலிதாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
நாளை மறுநாள் இறுதி வாதம்
இதனிடையே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை இன்று காலை வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருப்பதை சுட்டிக் காட்டினர்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் முடிவு செய்வோம் என்று நீதிபதி டிகுன்கா கூறியிருந்தார். பின்னர் ஜெயலலிதா மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டதை அறிந்ததும், சொத்து குவிப்பு வழக்கில் வரும் 19ந் தேதி இறுதி வாதத்தை தொடங்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி டிகுன்கா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications