சாதிவாரிக் கணக்கெடுப்பு சட்டவிரோதம்- சுப்ரீம் கோர்ட்: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை!
டெல்லி: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த கணக்கடுப்புக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கும் அது இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்புக்கு மத்திய பிற்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம் என்று அனுமதி வழங்கியது.

சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இந்தக் கணக்கெடுப்பு உதவும்.
கடந்த 2010 ம் ஆண்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. 2011 ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 2012 ம் ஆண்டில் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த கணக்கெடுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு பல மாநிலங்களில் இன்னும் நடத்தப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications