கர்நாடகா கோவில்களில் எச்சில் இலைமேல் உருளும் பிரார்த்தனைக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை!
பெங்ளூரு: கர்நாடகாவில் கோவில்களில் நடத்தப்படும் "மடே ஸ்நானம்" மற்றும் உருளு சேவே என்ற எச்சில் இலை மீது உருளும் பிரார்த்தனைகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
கர்நாட்காவின் குக்கே சுப்ரமண்யா கோவில் உட்பட பல கோவில்களில் மடே ஸ்நானம் என்ற எச்சில் இலை மீது உருளுதல் என்ற பிரார்த்தனையை ஒரு சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர்.

மடே ஸ்நானம் என்பது, கோவில் திருவிழாவில் பக்தர்கள் உணவு உண்டபின்னர் அந்த எச்சில் இலைகளின் மேல் வேண்டுதல் வைத்துள்ளவர்கள் அங்க பிரதட்சணம் செய்யும் பிரார்த்தனையாகும்.
இதை எதிர்த்து டி.ஆர்.அந்தியர்ஜுனா, கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை 2012 ஆம் ஆண்டு, டிசம்பர் 27 ந் தேதி அன்று தொடர்ந்தார். இந்த பிரார்த்தனையானது மக்களின் உரிமைகளுக்கும், உடல் நலனுக்கும் எதிரானது என்று அந்த மனுவிக் கூறப்பட்டிருந்தது. இம்மனுவுக்கு பதிலளித்த கோவில்களின் நிர்வாகிகள் 500 ஆண்டு பழமையான இச்சடங்குக்கு தடை விதிக்க கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அப்பதில் மனுவினை கடந்த நவம்பர் 19 ஆம் தேதியன்று விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், தட்சிண கன்னடாவைச் சேர்ந்த குக்கே சுப்ரமண்யா கோவில் உட்பட மூன்று கோவில்களில் நடைபெறும் "மடே ஸ்நானம்" என்ற எச்சில் இலை மீது உருளும் பிரார்த்தனைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்த ஆதிவாசி புடாகட்டு ஹிட்ரக்ஷனா சமிதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன், பானுமதி பெஞ்ச், இது பழங்கால வழக்கம். எனவே, தடை விதிக்கக் கூடாது என கோவில் நிர்வாகம் வாதிடுகிறது. 500 ஆண்டு கால வழக்கம் என்பதால் அதை பின்பற்ற அனுமதிக்க முடியாது.
தீண்டாமை கூட பழங்கால வழக்கம் தான். அதையும் அனுமதிக்க முடியுமா ?. எனவே, மடே ஸ்நானம் என்ற எச்சில் இலை மீது உருளும் பிரார்த்தனையை அனுமதிக்க முடியாது. இதற்கு அனுமதி வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது" என்று அதிரடி தீர்ப்பு வழங்கினர்.


Click it and Unblock the Notifications
