தொடர்ந்து அதிகரிக்கும் பன்றிக் காய்ச்சல் மரணங்கள்.. இதுவரை 1627 பேர் பலி...29,000 பேர் பாதிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது, இக்காய்ச்சலால் 29 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்.டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு தற்போது இக்காய்ச்சலின் அச்சுறுத்தல் அதிமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் இக்காய்ச்சலின் தாக்கம் குறைந்தபாடில்லை. உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது.
ஜனவரி 1ஆம்தேதி வரை மார்ச் 11ஆம் வரை நாடு முழுவதும் 1,627 பேர் இக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். 28,441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 368 பேர் பலி
குஜராத் மாநிலத்தில்தான் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 368 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தானில் 367, மகாராஷ்டிராவில் 264, மத்திய பிரதேசத்தில் 221, தெலங்கானாவில் 69, கர்நாடகாவில் 65, பஞ்சாப்பில் 51, ஹரியானாவில் 44 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
உ.பியில் 35 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் 35, மேற்கு வங்கத்தில் 18, ஆந்திராவில் 18, டெல்லியில் 11, ஜம்மு-காஷ்மீரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடை தொடங்கியும் பொதுவாகவே குளிர்காலத்தில்தான் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் இருக்கும். குளிர்காலம் முடிவடையும் நிலையிலும் இக்காய்ச்சல் தொடர்கிறது.
விழிப்புணர்வு அவசியம்
பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தேவை. காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சத்தான உணவுவகைகளை எடுத்துக்கொண்டால் இக்காய்ச்சலில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
அச்சம் தேவையில்லை
பன்றி காய்ச்சலை தடுக்க மத்திய சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பன்றி காய்ச்சலுக்கான மருந்துகள் போதுமான அளவில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பலி
பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர், நேற்று உயிரிழந்தார்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நெல்லிமேட்டை சேர்ந்தவர் முத்துக்குமார், 40. சில நாட்களாக காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்த அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பன்றிக்காய்ச்சல் உறுதி
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், 10ஆம் தேதி கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் வியாழக்கிழமை இரவு சேர்க்கப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
15 நாட்களில் ஏழு பேர் பலி
பன்றிக்காய்ச்சல் பாதித்த ஏழு பேர், 15 நாட்களில் கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். தற்போதும், 15 பேர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவிலிருந்து கோவைக்கு, காய்ச்சலுக்காக அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்புடன், இரு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் இருந்தன. இதோடு பன்றிக்காய்ச்சலும் சேர்ந்து, 'கோ மார்பிட் கண்டிஷன்' நிலைக்கு போனதால், உயிரிழப்பு ஏற்பட்டது என்று கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் ஆலோசனை
மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ள வேண்டும். சுயபரிசோதனைகள், சுயமாக மருந்து உட்கொள்ளுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications