காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளின் வரைபடம் வெளியீடு
ஸ்ரீநகர்: காஷ்மீர் பஹல்காமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாடு முழுக்க பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கிடையே தீவிரவாத தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தாக்குதலின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவரவாதிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்தி மிக மோசமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வரைபடம் வெளியீடு
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்கள் அளித்த தகவலின் பேரில் 3 தீவிரவாதிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று பயங்கரவாதிகளும் ஆசிப் புஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவாக அறியப்படும் தி ரெசிஸ்டன்ஸ் பிராண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை மட்டும் தேடி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள படங்கள் நெஞ்சு உலுக்குவதாக அமைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அமித்ஷா
தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் காஷ்மீருக்கு விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே இன்றைய தினம் தாக்குதல் நடந்த இடத்திற்கு நேரில் சென்ற அமித் ஷா, பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்தார். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தை காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
இந்த கொடூர தாக்குதல் நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடி சவுதியில் இருந்தார். தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக நாடு திரும்பினார். நாடு திரும்பும்போதும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வளியை பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
காஷ்மீர் பஹல்காம் பகுதி அழகிய இயற்கைக்கு பெயர் போனது. தாக்குதல் நடந்த அந்த குறிப்பிட்ட இடத்தை நடந்தோ அல்லது குதிரை சவாரி மூலமாகவோ மட்டுமே அடைய முடியும். அந்த இடத்தை குறிவைத்து தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரின் இயற்கை அழகை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விரைந்துள்ள நிலையில், விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேபோல டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல் காஷ்மீரில் நிலவி வந்த அமைதியை சீர்குலைப்பதாக இருந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்ற கோரிக்கையும் நாடு முழுக்க எழுந்துள்ளது. இந்தச் சூழலில் தான் தீவிரவாதிகளின் வரைப்படங்களை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications