டெஹல்கா நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரியிடமும் விசாரிக்கிறது கோவா போலீஸ்
பனாஜி/டெல்லி: பெண் பத்திரிகையாளருக்கு டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் குறித்து அப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான சோமா செளத்ரியிடம் கோவா போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

டெஹல்கா நிறுவன ஆசிரியரான தருண் தேஜ்பால், சக பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். அண்மையில் கோவாவில் நடைபெற்ற அப்பத்திரிகையின் நிகழ்ச்சி ஒன்றில் லிப்டில் செல்லும்போதும் மிக மோசமாக அப்பெண் பத்திரிகையாளரிடம் தருண் தேஜ்பால் நடந்து கொண்டிருக்கிறார்.
இது குறித்து நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரியிடம் அப்பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே தமது தவறுக்கு தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் இதற்காக தாம் 6 மாத காலம் ஆசிரியர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தருண் தேஜ்பால் கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தருண் தேஜ்பாலின் விலகல் நடவடிக்கை போதுமானது அல்ல என்று கூறிய பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர், இது தொடர்பாக கமிட்டி அமைக்க வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து டெஹல்கா நிறுவனம் கமிட்டி ஒன்றையும் அமைத்திருக்கிறது. இந்நிலையில் கோவா மாநில அரசு இந்த விவகாரத்தை கையில் எடுத்தது.
தருண் தேஜ்பால் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன் அம்மாநில போலீசார் விசாரணைக்கு டெல்லி விரைந்தனர். டெல்லி வருகை தந்துள்ள கோவா போலீசார் முதலில் நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரியிடம் விசாரணை நடத்துகின்றனர். அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மின் அஞ்சல்களையும் கோவா போலீசார் சேகரிக்கின்றனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் தனியாக வாக்குமூலம் பதிவு செய்கிறது கோவா போலீஸ். இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பாலிடம் போலிசார் விசாரணை நடத்த உள்ளனர். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications