டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஷூ வீச்சு! பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு
டெல்லி: செய்தியாளர் சந்திப்பின்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது எதிர் கோஷ்டியை சேர்ந்தவர் ஷூ வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று மாலை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். 'டெல்லி ஆட் ஈவன்' திட்டம் குறித்து, செய்தியாளர் சந்திப்பில் கேஜ்ரிவால் விளக்கம் கொடுத்தபடி இருந்தார். அப்போது கூட்டத்தின் பின் வரிசையில் இருந்து எழுந்த ஒரு நபர், தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி, கேஜ்ரிவாலை குறி வைத்து வீசினார்.
Shoe hurled at CM Arvind Kejriwal during a press conference in Delhi, man detained pic.twitter.com/jwcPnmJIWo
— ANI (@ANI_news) April 9, 2016
ஷூ எறியப்படுவதை பார்த்த பாதுகாவலர்கள் அதை கையால் தட்டிவிட்டு, கேஜ்ரிவால் மீது படாமல் பார்த்துக் கொண்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஷூ வீசிய நபரை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவரது பெயர் வேத பிரகாஷ் என்பதும், ஆம் ஆத்மி சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆம் ஆத்மி குறித்த, ஸ்டிங் ஆபரேசன் சிடி என்னிடம் உள்ளது என்று அந்த நபர் போலீசாரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாஜக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரவிந்த் கேஜ்ரிவால் மீது அவ்வப்போது தாக்குதல் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. 2014ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி, சுல்தான்புரியில், ரோடு ஷோ நடத்திய கேஜ்ரிவாலை நபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். ஒருமுறை முட்டை வீச்சும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications