குஜராத்தில் பாஜகவின் வெற்றிக்கு மோடி வகுத்த 6 வியூகங்கள் என்ன தெரியுமா?
குஜராத்தில் தடைகள் பல தாண்டி அரசியல் சாணக்கியத்தனத்தால் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது பாஜக.
காந்தி நகர்: அரசியலில் சாணக்கியத்தனத்தை சாமர்த்தியமாக பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சியின் கடும் போட்டி, ஹர்த்திக் படேலின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தின் நகர்ப்புற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற தொகுதிகளை கைப்பற்றியதால் பா.ஜ.க. தோல்வியில் இருந்து தப்பித்தது.
150 தொகுதிகளில் பாஜக ஜெயிக்கும் என்று கூறி வந்த நிலையில் தோல்வியடையாமல் பெரும்பான்மையோடு குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி வருவதால் பிரதமர் மோடியின் கவுரவம் தப்பித்துள்ளது. தனது சொந்த மாநிலத்தில் பாஜக தோற்காமல் இருக்க மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளார்.

ஐயரின் விமர்சனம்
மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடி ஒரு இழிவான மனிதர். அவருக்கு மரியாதை தெரியாது என்று பேசியிருந்தார். மணிசங்கர் ஐயரின் நீச் ஆத்மி என்ற விமர்சனத்தை காங்கிரஸ் கட்சியே விரும்பவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீச் ஆத்மி என்ற சொல் வர்ணாசிரம அடிப்படையில் தீண்டதகாதவன், பிறப்பால் தாழ்ந்தவர் என்பதை குறிக்கும். இந்த விமர்சனம் குஜராத் தேர்தலில் எதிரொலித்தது. பாஜக இதை சரியாக பயன்படுத்தியது.

குஜராத் ஜிஎஸ்டி வரி
குஜராத், இமாசல பிரதேசத்தின் தேர்தலுக்கு முன்பாக ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டன. அதிகபட்ச வரியான 28 சதவிகிதத்தில் 18,12,0 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதுவும் சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்தது.

எளிதான கடன்கள்
கிராமப்புற விவசாயிகளைக் கவரும் வகையில் ரூ.3 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் அளிக்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் விஜய் ரூபானி. இதன் மூலம் 25 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். இதுவும் வாக்குகளாக மாறியது.

மணிசங்கரை தாக்கிய மோடி
தன்னை விமர்சனம் செய்திருந்த மணிசங்கர் ஐயரை தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக சாடினார் பிரதமர் மோடி. மணிசங்கர் ஐயர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அழைத்து ரகசியமாக பேசியதாக மீடியாக்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு 3 மணி நேரம் நடந்து இருக்கிறது. மணிசங்கர் ஐயர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கவேண்டும் என்று கேட்டார் மோடி. இது நல்ல பலனை கொடுத்தது.

வீடியோ வெளியிட்ட பாஜக
குஜராத் சட்டசபை தேர்தலுக்காக ஹர்திக் படேலும், அவருடைய படிதார் அனமத் அந்தோலன் சமிதியும் கடினமாக உழைத்தது. பாஜகவினரே ஆச்சரியப்படும் வகையில் மக்கள் கூட்டத்தை திரட்டி அனைவரையும் மிரள வைத்தார் ஹர்திக். குஜராத் தொலைக்காட்சி ஒன்றில் ஹர்திக் பட்டேலும், வேறு ஒரு பெண்ணும் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது. என்னைப் பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு குஜராத் பெண்களை இழிவாக சித்தரிக்கிறது பா.ஜ.க. வேறு எந்த வழியிலும் அவர்களால் அரசியல் செய்ய முடியாததால் இப்படி கீழ்த்தரமான அரசியலில் இறங்கி விட்டனர் என்று குற்றம் சாட்டினார் ஹர்த்திக் படேல்.

இழிவு படுத்திய நிசாமி
என்னை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து வருகிறது. என்னை மோசமாக சித்தரிக்கிறார்கள். குஜராத் மண்ணின் மைந்தனான என்னை அவர்கள் இப்படி அவமதிப்பு செய்கிறார்கள். இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள சல்மான் நிசாமி டுவிட்டர் மூலம் என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். அதில், ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, அவருடைய பாட்டி இந்திரா காந்தி என குறிப்பிட்டு மோடிக்கு தாய்- தந்தை யார்? என்று கேட்டு இருக்கிறார். நாம் எதிரிகளிடம் கூட இது போன்ற கேள்விகளை கேட்க மாட்டோம் என்று பிரச்சாரம் செய்தார்.

மோடியின் அஸ்திரங்கள்
காங்கிரஸ் கட்சி ஏவிய அத்தனை அஸ்திரங்களையும் அக்கட்சிக்கு எதிராகவே திருப்பி விட்டார் பிரதமர் மோடி மணிசங்கர் ஐயர் தொடங்கி சல்மான் நிசாமி வரை அத்தனை பேரும் மோடிக்கு எதிராக பேசுவாக பேசுவதாக கூறி தங்களுக்குத் தாங்களே சூனியம் வைத்துக்கொண்டனர். இதன் மூலம் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. பாஜகவின் 150 சீட் இலக்கை அடைய முடியவில்லை என்றாலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது பாஜக.












Click it and Unblock the Notifications