கடத்தல் தங்கம் வாங்கிய 'பிரபல நகைக்கடை' டைரக்டர் கைது
கொச்சி: கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட தங்கத்தை வாங்கியதாக கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல நகைக்கடையான மலபார் கோல்டின் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மை காலமாக வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு கிலோ கணக்கில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு கடத்தப்படும் தங்கத்தில் பல கிலோக்கள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கடத்தி வரப்படும் தங்கம் எல்லாம் எங்கே போகிறது என்று தெரியாமல் வருவாய் துறை அதிகாரிகள் குழம்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தான் அவர்களின் குழப்பம் தீர்ந்துள்ளது.

மலபார் கோல்டு
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பிரபல நகைக்கடையான மலபார் கோல்டு வெளிநாட்டில் இருந்து கடத்தப்படும் தங்கத்தை வாங்கியதாக அதன் இயக்குனர் அஷ்ரபை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்தனர்.

10 கிலோ தங்கம்
அஷ்ரப் பிரபல தங்க கடத்தல் மன்னனான ஷஹாபாஸிடம் இருந்து 10 கிலோ தங்கம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த தங்கம் கடத்தி வரப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார். 39 கிலோ தங்கம் கடத்தியதற்காக ஷஹாபாஸ் அண்மையில் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஷஹாபாஸை தங்கள் காவலில் எடுத்து 5 நாட்கள் விசாரிக்கவிருக்கிறது.

20 ஆண்டு சேவை
கைது செய்யப்பட்டுள்ள அஷ்ரப் தங்க கொள்முதல் துறையில் பணியாற்றும் ஒரு ஊழியரே தவிர அவர் ஒன்றும் இயக்குனர் இல்லை என்று மலபார் கோல்டு தலைவர் எம்.பி. அகமது தெரிவித்துள்ளார். நகை வியாபாரத்தில் 20 ஆண்டுகளாக நல்ல பெயர் எடுத்துள்ளோம். எந்த விசாரணை நிறுவனம் முன்பும் கணக்குகளை சமர்பிக்க தயாராக உள்ளோம் என்று அகமது மேலும் தெரிவித்துள்ளார்.

600 கிலோ
கடந்த 3 மாதங்களில் மட்டும் 600 கிலோ தங்கம் கேரளாவுக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. மேலும் கடந்த 4 வாரங்களில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் 80 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரசு விதித்த வரி
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசு உயர்த்திய பிறகு கடத்தல் சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இந்த வரிவிதிப்புக்க பிறகு கடந்த 6 மாதங்களில் 3 டன் தங்கம் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள்
தங்கம் கடத்தும் கும்பல் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகளை பயன்படுத்துகிறது. அவர்களுக்கு ரூ.1 லட்சம் பணம் கொடுக்கப்படுகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் மற்றும் காசரக்கோடு ஆகிய மாவட்டங்களில் தங்க கடத்தல் அமோக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications